கடையடைப்பு போராட்டம் 
செய்திகள்

இ – பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு: தொடங்கியது கடையடைப்பு போராட்டம்!

Staff Writer

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரியில் வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் வாகனங்களுக்கான இ-பாஸ் நடைமுறை நேற்று முதல் உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தி உள்ளது. உயர்நீதிமன்ற ஆணையின்படி, நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில் இ-பாஸ் வழங்கி முடிக்கப்பட்டுவிட்டது.

சுற்றுலா வாகனங்களுக்கான நீதிமன்ற கட்டுப்பாட்டை நீலகிரியில் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள வணிகர்கள் எதிர்த்து வருகின்றனர். இதை எதிர்த்து அவர்கள் இன்று கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப்போராட்டம் தொடங்கி உள்ளது.

ஊட்டி, குன்னூர், கூடலூர், குந்தா, கோத்தகிரி, பந்தலூர் ஆகிய தாலுகாக்களிலும் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணிக்கு போராட்டம் தொடங்கி நாளை காலை 6 மணி வரை போராட்டம் நீடிக்க உள்ளது. போராட்டம் காரணமாக நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. பால் மற்றும் மருந்து கடைகள் இந்த போராட்டத்தில் பங்கெடுக்கவில்லை.