ராகுல் காந்தி - லல்லு பிரசாத் யாதவ் 
செய்திகள்

வாக்காளர் அதிகார நடைபயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி!

Staff Writer

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று பிகாரில் உள்ள சசாரமில் இருந்து தனது 16 நாள் 'வாக்காளர் அதிகார நடைபயணத்தை' தொடங்கினார்.

இன்று தொடங்கும் இந்த யாத்திரை 1,300 கிலோமீட்டர் தூரம் பயணித்து, செப்டம்பர் 1 ஆம் தேதி பாட்னாவில் நடைபெறும் மெகா பேரணியுடன் முடிவடையும். நிறைவுநாள் பேரணியில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

தனது நடைபயணம் குறித்து ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "16 நாட்கள். 20+ மாவட்டங்கள். 1,300+ கி.மீ தூரம் வாக்காளர் உரிமை நடைபயணத்துக்காக நாங்கள் மக்களிடையே வருகிறோம். இது மிகவும் அடிப்படை ஜனநாயக உரிமையான 'ஒரு நபர், ஒரு வாக்கு' என்பதை பாதுகாப்பதற்கான போராட்டம் ஆகும். அரசியலமைப்பைக் காப்பாற்ற பிகாரில் எங்களுடன் சேருங்கள்," என்று தெரிவித்தார்.

இந்த நடைபயணத்தை ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் லாலு பிரசாத் யாதவ் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் தொடக்க விழாவில் கலந்துகொள்கிறார். மேலும், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் இண்டியா கூட்டணியின் மற்ற கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.