சென்னையை வறுத்த வெயிலில் மிதமான மழை 
செய்திகள்

காலையில் வாட்டிய வெயில்… மாலையில் குளிர்வித்த மழை!

Staff Writer

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், புறநகர்ப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

சென்னையில் ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, வடபழனி, வளசரவாக்கம், போரூர், மதுரவாயல், கோயம்பேடு, அமைந்தகரை, அரும்பாக்கம், அண்ணா நகர், முகப்பேர், எழும்பூர், வேப்பேரி, காசிமேடு, சென்ட்ரல், தண்டையார்பேட்டை, பாரிமுனை, ராயபுரம், திருவொற்றியூர், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்கிறது.

இதேபோன்று சென்னை புறநகர்ப் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், திருமுல்லைவாயல், கும்மிடிப்பூண்டி, செங்குன்றம், பூவிருந்தவல்லி உள்ளிட்டப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

கோயம்புத்தூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டிருந்தது.