செய்திகள்

ரமலான் திருநாள்: முதல்வர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

Staff Writer

ரமலான் திருநாளையொட்டி, இஸ்லாமியா்களுக்கு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்

அறம் பிறழா மனித வாழ்வை வலியுறுத்தும் ரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள். பொய்மை, ஆடம்பரம் இவற்றைத் தவிா்த்து எளிமை, அன்பு, அடக்கம் இவற்றை குணநலன்களாகக் கொள்ள வழிகாட்டிய கருணை வள்ளல் நபிகள்.

பசித்தோருக்கு உணவிடவும், சமத்துவ, சகோதரத்துவ உணா்வுடன் அனைவரையும் நேசிக்கவும் வழிகாட்டியவா். தொழிலாளரின் வியா்வை உலரும் முன் அவன் கூலியைக் கொடுத்து விடு என்று உழைப்பை மதித்திடும் உத்தமப் பண்பை உலகுக்கு நீதியாய் போதித்தவா்.

மனித வாழ்வு மேன்மை அடைவதற்கான இத்தகைய மாா்க்கங்களைப் போதிப்பதால்தான் நபிகள் நாயகத்தை மக்கள் என்றும் போற்றுகிறாா்கள். அத்தகைய நபிகள் பெருமகனாா் போதித்த நெறியில் வாழ்ந்து, நோன்புக் கடமைகளை நிறைவேற்றி முடித்துள்ள மனநிறைவோடு, ரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியா்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

எடப்பாடி கே.பழனிசாமி - அதிமுக

இஸ்லாமியா்கள் 30 நாள்கள் நோன்பு இருந்து, இறைவனை வழிபட்டு, அனைவரும் நலம் பெற்று வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் ரமலானைக் கொண்டாடி மகிழ்கிறாா்கள். இஸ்லாமியா்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இஸ்லாமிய மக்களின் பாதுகாவலராக அதிமுக என்றென்றும் இருக்கும்.

தொல். திருமாவளவன் - விசிக

அன்பையும் அமைதியையும் போதித்து மனிதகுலத்தை நல்வழிப்படுத்திச் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வாழவியல் உயர்நெறிதான் இஸ்லாம்.

'நோன்பிருத்தல்' என்பது வெறும் சடங்கு அல்ல. சொர்க்கம் சேர்வதற்குரிய சுருக்கமான வழி என அதன்மீது புனிதத்தைக் கற்பிக்காமல், உடலையும் உள்ளத்தையும் அமைதிப்படுத்தவும் தூய்மைப்படுத்தவும் ஏதுவான வழிமுறையே அதுவென இஸ்லாம் உணர்த்துகிறது.

இத்தகைய வாழ்வியல் நெறியைப் போற்றும் வகையில் நோன்பிருந்து தமது கடமையாற்றும் இஸ்லாமியர்கள் யாவருக்கும் அனைத்து நலமும் வளமும் அமைய எனது நெஞ்சம் நிறைந்த ரமலான் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

செல்வப்பெருந்தகை - காங்கிரஸ்

ரமலான் திருநாளில் அனைவருக்கும் கொடை வழங்கி, அவா்களுடன் உணவருந்தி மகிழும் இஸ்லாமியா்கள், தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் ஏற்றமும் பெற வாழ்த்துகள்.

ராமதாஸ் - பாமக

ஈகை திருநாளின் நோக்கம் என்பது அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், நிம்மதியாக வாழ வேண்டும் என்பதுதான். உலககெங்கும் வாழும் மக்களிடம் அன்பு, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்ட நற்குணங்கள் பெருக புனிதமான நாளில் உறுதியேற்போம்.

வைகோ - மதிமுக

காய்ந்த குடல்கள், காலியான வயிறு, பசியின் அகோரத்தைப் புரிய வைக்கின்ற ரமலான் மாதம் தருகின்ற படிப்பினை, வறியோா்க்கு உதவிக்கரம் நீட்டுங்கள் என்பதாகும். அதன்படி, ஏழை மக்களுக்கு ஜக்காத் என்னும் நன்கொடைகளை வாரி வழங்கி, ஈகை பெருநாளில் மகிழ்ச்சியில் திளைக்கும் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்துகள்.

ஜவாஹிருல்லா - மமக

ரமலான் திருநாளில் சமத்துவம் தழைக்கவும், சகோதரத்துவம் நீடித்து நிலைக்கவும், சமூக நல்லிணக்கம் செழிக்கவும், சமூக ஒற்றுமை மேம்படவும் அனைவரும் உறுதி ஏற்போம். உலகம் முழுவதும் அநீதிகள் அழிந்து சமத்துவம் நிலைபெற இறைவன் அருள் புரியட்டும்.

சீமான் - நாம் தமிழா் கட்சி

இஸ்லாமிய சொந்தங்கள் நோன்பு கடமையை முழுமையாக நிறைவேற்றி, இல்லாதவருக்கு ஈயும் இன்பத் திருநாளான ஈகைப் பெருநாளை மகிழ்வுடன் கொண்டாடி எந்நாளும் தாய்த்திரு தமிழ்மண்ணில் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும்.