ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா 
செய்திகள்

ரெப்போ வட்டி விகிதம் 5 வருடங்களுக்குப் பிறகு குறைப்பு!

Staff Writer

வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்குப் பின்னர் ரெப்போ வட்டி விகிதம் குறைந்துள்ளது. இதன்மூலம் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதமும் குறையக் கூடும்.

ரெப்போ வட்டி விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். இருமாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூடி, ரெப்போ விகிதம் தொடர்பாக முடிவுகள் எடுப்பது வழக்கம்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டம் கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தின் கடைசி நாளான இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

5 ஆண்டுகளுக்குப் பின்னர் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரையில், 6.5 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி தற்போது .25 புள்ளிகள் குறைக்கப்பட்டு 6.25 சதவீதமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் வரை 6 முறை ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யாமல் அதற்கும் முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடரச் செய்தது. இந்நிலையில் இன்று ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.