தங்களது ஓய்வு குறித்து பரவிய வதந்திக்கு இந்திய கேப்டன் ரோகித் சர்மா, விரட் கோலி இருவருமே முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருடன் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, விரட் கோலி இருவரும் ஓய்வு பெறவுள்ளதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவின. ஆனால், நேற்று நடந்த போட்டியில் ரோகித் சர்மா 76 ரன்கள் அடித்து அசத்தினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரோகித் சர்மா, “நான் இந்த ஃபார்மட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை. அதில் நான் தெளிவாக உள்ளேன். வதந்திகளை பரப்ப வேண்டாம்.” என கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையே, விராட் கோலியிடம் பேட்டி எடுத்த வர்ணனையாளர் சைமன் தியோள், ’உங்களது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கூறுங்கள்’ என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த கோலி, ‘‘தற்போது சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடிய இந்திய அணியால், அடுத்த 10 வருடம் வரை தொடர்ச்சியாக விளையாட முடியும். அந்த அளவுக்கு அனைவரிடமும் ஆற்றல் இருக்கிறது. அடுத்த 10 வருடங்கள் வரை விளையாடினால், கோப்பைகளை குவிக்கலாம்”என்றார்.
அதாவது, அடுத்த 10 வருடங்கள் வரை என்னால் விளையாட முடியும் என்பதைதான் விராட் கோலி மறைமுகமாகக் கூறியுள்ளார். இதன்மூலம், கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் 2027 உலகக் கோப்பை வரை விளையாட அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அப்போது, கோலிக்கு 38 வயதும், ரோகித் சர்மாவுக்கு 39 வயதும் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.