அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டா
அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டா 
செய்திகள்

பெண்களுக்கு Rugged ஆண்களை ஏன் பிடிக்கிறது?

மு.வி.நந்தினி

“குடிகாரனுடன் கூட வாழ்ந்திடலாம்; ஆனால் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவர்கள் கூட வாழ்வது நரகத்தைவிட மோசமானது” இப்படியொரு ‘கருத்து’ ஜான்சி என்ற பெயருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி சமூக ஊடகங்களில் பேசுபொருளானது.

குடி குடும்பங்களை அழிக்கிறது; மதுவிலக்கு வேண்டும் என ஒரு பக்கம் சமூக ஊடகங்கள் பரபரத்துகிடக்க, குடிகாரனுடன் வாழ்வதைவிட, நல்லவனோடு வாழ்வதுதான் நரகத்தைவிட மோசமானது என எழுதியது, அதுவும் அதுவொரு பெண் ஐடியில் பதிவானதும் தீப்பொறி பற்றிக்கொண்டது.

பலர் அந்த ஐடியில் சென்று ஆதரவும் எதிர்ப்புமாக பதிவிடத்தொடங்கினர்.

“குடிகாரனோடு வாழ்வது கஷ்டம்தான். ஆனால் அதைவிட பெருங்கஷ்டம் எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவனுடன் வாழ்வதும். அவன் நல்லவன் என்ற எண்ணம், எந்நேரமும் அடுத்தவரை மட்டம் தட்டுவதும் தன்னை பெருமிதமாக எண்ணுவதும் என்ற நடத்தை பிரச்சினை உள்ளவரோடு வாழ்வது என்பது நிச்சயம் நரகமே. கேட்டா நா என்ன குடிக்கிறேனா, பொண்ணு பின்னாடி போறேனான்னு அவர்கள் நல்ல பழக்கங்களை லிஸ்ட் போடுவாங்க.

தன் கூட இருக்கிறவங்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ள அன்புள்ள மனம் மட்டும்தான் தேவை. தான் நல்லவன் என்ற கர்வம் இல்லை.” என பெண்கள் சிலரின் ஆதரவும்.

“ஒரு டீடோட்டலர கல்யாணம் பண்ணா, அவன குடிக்க சொல்லியும், சைட்ல கீப் எதாவது வச்சிக்க சொல்லியும் பழக்கப்படுத்துங்க.. அவன் மாறலயா... டைவர்ஸ் பண்ணுங்க. இன்னொரு கல்யாணம் பண்ணிக்க லட்சோப லட்சம் குடிப் பிரியர்கள் இருக்காங்க. அத வுட்டுட்டு அவனோட வாழுறதையே நரகம்னு சொல்லாதிங்க.

குடிகாரனா இருந்தாலும் குத்தம், நல்லவனா இருந்தாலும் குத்தம். ஆகமொத்தம் குத்தம் சொல்ல ஏதோ ஒரு காரணம் தேவ.. ட்ரெண்டிங் ஆக ஒரு கண்டெண்டும் தேவ.!” என ஆண்களின் புலம்பல்களும் பதிவு செய்யப்பட்டன.

ஆனால், பெரும்பான்மையான கருத்துகள் மது, புகை, மாது என எந்தவித பழக்கங்களும் இல்லாதவர்கள் வாழத்தகுதியானவர்களே இல்லை என்பதுபோல எழுதப்பட்டன. உண்மையில் எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாதவர்கள் பிரச்சினைக்குரியவர்களா? உளவியல் மருத்துவர் ராதிகா முருகேசனிடம் விளக்கம் கேட்டோம்: “காதல் பற்றி, ரிலேஷன்ஷிப் பற்றி, ஆண்மை பற்றி இவர்களுக்கு இருக்கும் புரிதலில் கொஞ்சம் பிரச்சினைகள் இருக்கு. அவன் குடிகாரனா இருக்கான், குடிகாரனா இல்ல; கெட்ட பழக்கம் வெச்சிருக்கான், கெட்ட பழக்கம் இல்லை இதெல்லாம் தாண்டி வரக்கூடியது காதல். குடிப்பழக்கம் ஒருவகையான மனநோய்.

ஸோ ஒருத்தரை காதலிக்கிறீங்க, அவருக்கு குடிநோய்ங்கிற மனநோய் இருக்குன்னா அதை சரிபண்றதுக்குத்தான் பார்க்கணுமே தவிர, காதலிக்கிறதுக்கோ திருமணத்துக்கோ குடியை ஒரு தகுதிபோல வைக்கிறது எதுலேர்ந்து வருதுன்னா இந்தப் படங்கள்லேர்ந்து வருது.

ஸ்டைலா சிகரெட் பிடிச்சிகிட்டு, தண்ணி அடிச்சிக்கிட்டு இருந்தா அது ஆண்மையின் வெளிப்பாடா காட்டறாங்க. ஆண்மையை இதோட தொடர்பு படுத்திக்காட்டறாங்க. நல்ல ஒரு ஆண்மகன், ஆண்மையை வெளிப்படுத்திக்கொள்ளக்கூடியவன். அவன் புகைப்பிடிக்கலாம், தண்ணி அடிக்கலாம், கெட்ட பழக்கங்கள் இருக்கலாம், வேலை செய்யாமல் இருக்கலாம். இதெல்லாமே இது ஆண்மையின் வெளிப்பாடு. அதே சமயம் ஒழுக்கமா இருக்கிறவங்க, அதாவது எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாதவங்கள், ஒரு போரிங் பர்சனாலிட்டி. அதாவது பழமா இருப்பான். ஃபன் இருக்காது; என் ஜாய்மெண்ட் இருக்காது அப்படின்னு இவங்களே சில விதிகளை வெச்சிருக்காங்க அது ரொம்ப தவறு. ஏன்னா, புகை பிடிக்கிறது, புகையிலை போடறது உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விஷயங்கள். இதுக்கும் ஒருத்தரின் குணங்களுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. அவன் உங்களை எந்த அளவுக்கு காதலிப்பான், எந்த அளவுக்கு மகிழ்ச்சியா வைத்திருப்பான் என்பதற்கும் அவனுடைய கெட்ட பழக்கங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

தொடர்பை கொண்டுவர்றது இவங்க பார்க்கக்கூடிய படங்கள்லேர்ந்து வர்றதுதான். அடுத்து கெட்ட பழக்கம், மனநோய் அளவுக்கு அந்தப் பழக்கங்கள் இருக்கிறவங்களை திருமணம் செய்துகிட்டு நிறைய பெண்கள் கஷ்டப்படுறாங்க. மதுவுக்கு அடிமையான ட்ரீட்மெண்டுக்குக்கூட வராம, நோய் முற்றி உடல் பலவீனப்பட்டு குழந்தை, குடும்பத்தை விட்டு இறந்துகூட போயிடறாங்க. இப்படி பல பிரச்சினைகள் இருக்கு. இந்தப் பதிவுகளைப் பார்த்துட்டு பெண்கள் தவறான முடிவுகளை எடுக்க வாய்ப்பிருக்கு” என நீண்ட விளக்கம் கொடுத்ததோடு எச்சரிக்கவும் செய்கிறார்.

பெரும்பாலும் சினிமாக்கள்தான் இப்படியான வெகுஜென உளவியலை உருவாக்கி வைத்திருக்கின்றன என்கிறார் மருத்துவர் ராதிகா முருகேசன்.

“படத்துல காட்டப்படுகிற சில ஆண்கள் பர்சனாலிட்டி டிஸ்ஸார்டர் இருக்கமாதிரி ஒரு பெண்ணை துரத்தி துரத்தி காதலிக்கிறது, உதாரணத்துக்கு ‘புஷ்பா’ படத்துல காசு கொடுத்து காதலிக்க சொல்றது, ஐயாயிரம் கொடுத்த முத்தம் கொடுப்பியான்னு கேட்கிறது இதெல்லாம் ஆண்மையின் வெளிப்பாடா காட்டப்படுது. அதுல காலையிலேர்ந்து ரவுடித்தனம் பண்ணிட்டு, சாயந்திரம் போய் தண்ணி அடிச்சிட்டு டான்ஸ் ஆடுனா அது ஒரு ஜாலின்னு காட்டறாங்க. உண்மையிலேயே அந்தமாதிரி பொறுப்பில்லாத ஆண்களுடன் வாழ்வது ரொம்பவே கடினம்.

மருத்துவர் ராதிகா முருகேசன்

என்கிட்டகூட நிறைய பேர் கேட்டிருக்காங்க ஏன் பேட் பாய் இமேஜ் இருக்கக்கூடியவங்க பின்னாடி பெண்கள் போறாங்கன்னு. இதெல்லாம் ஆண்மகனின் வெளிப்பாடுன்னு நம்ம மனசுல சினிமாக்கள் மாதிரி வெகுஜென ஊடகங்கள் பதிய வெச்சிருக்கு.

இதைப் பார்க்கும்போது இன்னொரு ஜோக் ஒன்னு எனக்கு நினைவுக்கு வந்தது. குடிக்காத ஆண், புகைக்காத ஆண், கேர்ஸ் ஃபிரண்ட்ஸ் இல்லாத ஆண் மகனை நான் தேடிக்கிட்டு இருக்கேன்னு அவ கேட்கிறா, அந்தமாதிரி ஆண்கள் எல்லாம் இருக்காங்க, ஆனா அவங்களையெல்லாம் நீங்க பிரதர்ஸ்னு கூப்பிடுறீங்கன்னு ஒருத்தர் சொல்வார்.

ஸோ, இதுக்கு முதன்மையான தேவை புரிதல், காதல்னா என்ன? கேரிங்! மத்தங்களை பத்தி கேரிங் வர்றதுக்கு முன்னாடி தங்களைப் பற்றி வரணும். நம்முடைய மனநலம், உடல்நலம் பற்றி கேரிங் இருந்தாதான்; மற்றவர்களைப் பற்றி கேர் பண்ண முடியும். நாமே உடல்நலத்தையோ, மனநலத்தையோ பாதிக்கிற அளவுக்கு ஆல்கஹால் அதிகமா எடுக்குறோம், புகைக்கிறோம்னா நம்ம உடல்நலனுக்கே முக்கியத்துவம் தர்றாதவராதான இருக்கோம். இதுல எப்படி மத்தவங்களை கேர் பண்ண முடியும்? இவ்வளவு விஷயங்கள் பின்னணியில் இருக்க, ஒற்றை வரியில் இது சரி, இது தப்புன்னு சொல்லிட முடியாது. அப்படி சொல்றதும் சமூகத்துக்கு நல்லதல்ல” என்கிறார்.

Rugged boys மீது நம் பெண்களுக்கு ஒருவித மயக்கம் இருக்கத்தான் செய்கிறது. மருத்துவர் ராதிகா சொன்ன உளவியல் காரணங்கள் அதை மெய்ப்பிக்கின்றன. ஆனால், வாழ்க்கை என்பது ஃபாண்டசி அல்ல; ரத்தமும் சதையுமான உண்மை. இதை நம் பெண்களும் ஆண்களும் உணர வேண்டும்.