சாய்னா நேவால் - பாருபள்ளி காஷ்யப் 
செய்திகள்

காதல் கணவரை பிரிவதாக சாய்னா நேவால் அறிவிப்பு!

Staff Writer

இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது கணவர் பாருபள்ளி காஷ்யப்பைப் பிரிவதாக அறிவித்துள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய பாட்மிண்டன் வீரர்களான சாய்னா நேவால் மற்றும் பாருபள்ளி காஷ்யப், கடந்த 2018 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர்.

ஹைதராபாத்தில் உள்ள கோபிசந்த் பயிற்சி மையத்தில் 2005 ஆம் ஆண்டு முதல் இருவரும் ஒன்றாகப் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். 2012 ஒலிம்பிக் போட்டியில் இருவரும் கலந்துகொண்ட நிலையில், நட்பு காதலாக மாறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சாய்னா நேவல் இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருப்பதாவது:

”வாழ்க்கை சில நேரங்களில் நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்துச் செல்கிறது. மிகவும் யோசித்து, பரிசீலனை செய்த பிறகு, காஷ்யப்பும் நானும் பிரிவதாக முடிவு செய்துள்ளோம்.

இந்த நேரத்தில் எங்களின் தனியுரிமையைப் புரிந்துகொண்டதற்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சாய்னா நேவால் இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் பாட்மிண்டனில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமைக்குரியவர். அவர் 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். 2010 மற்றும் 2018 ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் சாய்னா நேவால் தங்கப் பதக்கம் வென்றார்.

அதேபோல், காஷ்யப்பும் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.