சரோஜா தேவி 
செய்திகள்

கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி காலமானார்!

Staff Writer

கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என ரசிகர்களால் புகழப்பட்ட பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) வயது மூப்பின் காரணமாக பெங்களூரி இன்று காலமானார்.

பழம்பெரும் நடிகையான சரோஜாதேவி பிறந்தது கர்நாடக மாநிலம் மைசூர். கன்னட திரையுலகில் அறிமுகமாகி, தமிழ் தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் கலக்கியவர்.

1954இல் கன்னடத்தில் அறிமுகமான ஓரிரண்டு ஆண்டிலேயே தமிழில் அறிமுகமானாலும் ரசிகர்களுக்கு அவரை அடையாளம் காட்டியது எம்ஜிஆருடன் நடித்த நாடோடி மன்னன் படம்தான்.

எம்ஜிஆருடன் மட்டும் 26 படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். எங்க வீட்டு பிள்ளை, படகோட்டி, அன்பே வா, கலங்கரை விளக்கம், நீதிக்குப் பின் பாசம், பணத்தோட்டம் என அவர் எம்ஜிஆருடன் நடித்த எல்லாமே ஹிட் படங்கள்.

சிவாஜியுடனும் 22 படங்களில் ஜோடியாக சரோஜாதேவி நடித்திருக்கிறார். ஆலயமணி, பாலும் பழமும், பாகப்பிரிவினை, புதிய பறவை என பெரும்பாலான படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்படும் காவியங்கள். அன்றைய முன்னணி நாயகர்களில் ஒருவரான காதல் மன்னன் ஜெமினி கணேசனுடனும் 17 படங்களில் நடித்திருக்கிறார்.

50களில் தொடங்கிய சரோஜாதேவியின் திரைப்பயணம் 1997இல் விஜய்யின் ‘ஒன்ஸ்மோர்‘ படத்தில் நீண்ட காலம் கழித்து சிவாஜியுடன் நடித்தார்.

சூர்யா, வடிவேலு உடன் ‘ஆதவன்‘ படத்தில் வரும் சரோஜாதேவியை இன்றைய தலைமுறையால் மறக்க முடியாது.

1960களிலேயே ‘கன்னட லேடி சூப்பர் ஸ்டார்‘ என புகழப்பட்ட சரோஜாதேவி, 200க்கும் படங்களில் நடித்துள்ளார். இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளைப் பெற்றுள்ளார். தலைமுறைகளை கடந்து போற்றப்படும் சரோஜாதேவி தன்னுடைய 87ஆவது வயதில் உயிரிழந்திருப்பது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.