செய்தியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சீமான் 
செய்திகள்

செய்தியாளர்களை அடிக்கப் பாய்ந்த சீமான்! - செஞ்சியில் என்ன நடந்தது?

Staff Writer

பவுன்சர்களால் தடுத்து நிறுத்தப்பட்ட செய்தியாளர்களை சீமான் அடிக்கப் பாய்ந்ததால், செஞ்சி பொதுக்கூட்ட மேடையில் பதற்றம் ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருக்கும் செஞ்சிக் கோட்டையை உலகப் பாரம்பர்யச் சின்னமாக அங்கீகரித்திருக்கும் `யுனெஸ்கோ’, அது மராட்டிய மன்னரான சிவாஜியின் கோட்டை என்பதாக குறிப்பிட்டிருக்கிறது.

அதையடுத்து பல்வேறு வரலாற்று ஆய்வாளர்களும், தமிழார்வலர்களும் அது தமிழ் மன்னரின் கோட்டை என்று அறிவிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதனடிப்படையில் `செஞ்சிக் கோட்டை ஆனந்தக் கோணுக்கு சொந்தமான கோட்டை’ என்ற நிகழ்ச்சி, செஞ்சியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று நடைபெற்றது.

அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சிக்கு செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் சென்றிருந்தனர். கட்சி நிர்வாகிகள் பேசி முடித்தபிறகு பேச வந்த சீமானை படமெடுக்க செய்தியாளர்கள் மேடையின் அருகில் சென்றனர்.

அப்போது அங்கிருந்த பவுன்சர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் செய்தியாளர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய பவுன்சர்கள், அவர்களை நெட்டித் தள்ளினர்.

அதற்கு, 'உங்கள் செய்தியை சேகரிப்பதற்குத் தானே வந்திருக்கிறோம். எங்களை தகாத வார்த்தைகளால் எப்படி திட்டலாம்' என பவுன்சர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.

அப்போது மேடையில் இருந்து அந்த வாக்குவாதத்தைப் பார்த்த சீமான், சட்டையை மடித்துக் கொண்டு கீழே இறங்கி செய்தியாளர்களை அடிப்பதற்குப் பாய்ந்தார். அப்போது அங்கே நின்றிருந்த ஒரு தொண்டரை கன்னத்தில் பளார் என்று அறைந்தார். அதையடுத்து தொண்டர்கள் அங்கு குவிய ஆரம்பித்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார், செய்தியாளர்களை பாதுகாப்பாக வெளியேற்றினார்கள்.

'ஒரு கட்சியின் தலைவர் பொது மேடையில் இப்படி நிதானத்தை இழக்கலாமா?’ என்று பேசியபடியே அங்கிருந்து சென்றனர் செய்தியாளர்கள்.