நாதக சீமான் 
செய்திகள்

வள்ளலார், வைகுண்டரைத் தாண்டி பெரியார் என்ன செய்துவிட்டார்? - சீமான் சர்ச்சை பேச்சு!

Staff Writer

''வள்ளலார், வைகுண்டரைத் தாண்டி ஈ.வெ.ரா. என்ன சமூக சீர்திருத்தம் செய்தார்,'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் பற்றி அவதூறாகப் பேசியதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது: தமிழர் அரசு, தமிழ், தமிழர் என்று பேசுவது எல்லாம் பித்தலாட்ட கருங்காலிகள் என்று பேசியதற்கு ஏன் சான்று கேட்கவில்லை.? தமிழர் என்று பேசுவது இனதுவேசமா? நாங்கள் யாருக்கு எதிரி? தமிழர் இல்லாத திராவிடர் என்று எதாவது தனியே இருக்கிறதா? இதற்கெல்லாம் சான்று கேட்டீர்களா?

மூவாயிரம் ஆண்டுகளாக இருக்கின்ற தமிழ்த்தாய் உங்களை படிக்க வைத்தாரா என்று கேள்வி கேட்கிறார்களே? படிக்காமலயா திருவள்ளுவர், கம்பன், ஔவை, ஆழ்வார்கள், நாயன்மார்கள் வந்தார்கள். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்கிறார்கள்.

அம்பேத்கரையும் பெரியாரையும் ஒப்பிடுவது எவ்வளவு பெரிய முரண். அம்பேத்கர் உலகத்திலேயே சிறந்த கல்வியாளர். இவர் யார்? தனக்கு தோன்றுவது எல்லாம் பேசுபவர் பெரியார். தமிழை சனியன் என்று பேசியவர் பெரியார்.

ஆதாரம் என்னிடம் கேட்கிறீர்களே, அதையெல்லாம் மறைத்து வைத்துக் கொண்டு என்னிடம் ஆதாரம் கேட்கிறீர்களே. அதை வெளியே எடுங்கள். நாங்கள் வெளியிட்ட ஆதாரம் பற்றவில்லை என்றால், பெரியாரின் எழுத்துகளை நாட்டுடைமை ஆக்குங்கள்.

பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்தார்? வள்ளலார், வைகுண்டரைத் தாண்டி அவர் என்ன சமூக சீர்திருத்தம் செய்தார்? பெரியாரை தாத்தா என பேசியிருக்கிறேன். ஆனால் தற்போது தெளிந்துவிட்டேன்.

பிரபாகரனைச் சந்திக்கும் வரை திராவிட திருட்டு கூட்டத்தில் நானும் ஒருவனாக இருந்தேன். அதன் பிறகு தான் தமிழ்த் தேசியம் என்றால் என்ன? தேவையான அரசியல் என்ன? என்ற அரசியலைக் கட்டமைக்கிறேன்.

இந்த நாட்டுக்கும் மண்ணுக்கும் வாழ்க்கை முழுக்க சிறையிலிருந்து தன் சொத்தை அழித்தார் வா.உ.சி? ஆனால் நீங்கள். சொத்தை பாதுகாக்க வாரிசு தேடினீர்கள்.

பெரியாரின் கொள்கையை வெட்டி சாய்ப்பதுதான் என்னுடைய வேலை.” இவ்வாறு சீமான் கூறினார்.