பிரபாகரன்- சீமான் சந்திப்பு ஒன்பது நிமிடங்கள் மட்டுமே நடந்தது என்றும் அவருக்கு ஆமைக்கறி பரிமாறப்படவில்லை என்றும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படம் போலியானது. அதனை எடிட் செய்து கொடுத்ததே நான் தான் என திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிரடியாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியது.
இது தொடர்பாக பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில், பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “சீமான், பிரபாகரன் சந்திப்பு நடந்தது உண்மைதான். ஆனால், அது வெறும் 8 முதல் 10 நிமிட சந்திப்பு தான். என்னைவிட ஈழத்திற்கு ஆவணப்படம் எடுக்க வந்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ் வாய் திறந்தால் இன்னும் அதிக உண்மைகள் வெளி வரும் என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில், ஈழத்திற்கு சீமான் சென்றிருந்த சமயம் அங்கே ஆவணப்படம் எடுக்க சென்ற சந்தோஷ், நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பல விவரங்களைக் கூறி உள்ளார்.
“ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கலை மீது அதிக ஆர்வம் கொண்டவர். அங்கிருந்தவர்களுக்கு அனைத்து வகையான கலையும் கற்றுத் தரப்பட்டது. அப்படிதான் சினிமாவும் கற்றுக் கொடுக்கப்பட்டது.
வாழ்த்துகள் படம் வெளியான நேரத்தில் தான் சீமான் ஈழத்திற்கு அழைக்கப்பட்டார். அதற்கு முக்கியமான காரணம் வன்னி அரசு. அதேபோல் ஈழத்தில் எடுக்கப்பட்ட ஆவணப் படத்திற்கும் சீமானுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அந்த சமயத்தில் சீமானின் பேச்சுகள் கவனிக்கப்பட்டது. சேரலாதன் மூலமாக தான் பிரபாகரனுக்கு சீமான் அறிமுகமானார். அதுவரை சீமானை யாரென்று கூட பிரபாகரனுக்கு தெரியாது.
சீமான் 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதிதான் ஈழத்திற்கு வந்தார். அங்கிருந்து பிப்ரவரி 23ஆம் தேதி மீண்டும் திரும்பிவிட்டார். அவர் பிரபாகரனை பிப்ரவரி 13ஆம் தேதி சந்தித்தார். அது வெறும் 9 நிமிடங்கள் வரையிலான சந்திப்பு தான். சீமான் ஆயுதங்களுடன் இருப்பது போல் எடுக்கப்பட்ட புகைப்படத்தை என் கேமராவில் தான் படமெடுத்தேன். அந்த ஆதாரம் என்னிடம் உள்ளது. ஆனால் தற்போது சீமான் பிரபாகரனுடன் எடுத்து கொண்டதாக சொல்லப்படும் புகைப்படம் போலியானது. ஏனென்றால் புகைப்படங்கள், வீடியோ எல்லாம் என்னிடம் மட்டுமே உள்ளது. சேரலாதனை நச்சரித்து தான் பிரபாகரனை சீமான் சந்தித்தார். விடுதலை புலிகளை சீமான் ஹோட்டல் சமையல்காரர்களை போல் மாற்றிவிட்டார். ஈழத் தமிழர்களின் வீடுகளில் விருந்தோம்பல் மிகச்சிறப்பாக இருக்கும். அவர்களை போல் விருந்தோம்பலில் சிறந்தவர்களே கிடையாது.
உச்சக்கட்ட போரின் போது ஆமைக்கறி உள்ளிட்ட உணவுகளும் பரிமாறப்பட்டன. மற்றவர்களுக்கு நடந்த விஷயங்கள் எல்லாம் தனக்கு நடந்ததாக சீமான் கூறி வருகிறார்.
நாங்கள் எல்லாம் ஒன்றாக இருந்தபோது பேசிய விஷயங்களை, தனக்கான ஒன்றாக சீமான் மாற்றி சொல்லி வருகிறார். நான் கடல் உணவுகளை சாப்பிட மாட்டேன் என்று அங்கிருந்தவர்களுக்கு தெரிந்துவிட்டது. அப்போது சேரலாதன் என்னிடம் வந்து, பிரபாகரனுக்கு சமையலராக உள்ளவர் சமைத்த ஆடு பிறட்டல் இதை சாப்பிடுங்கள் என்று கொடுத்தார். ஆனால், அது ஆமைக் கறி என்று பின் தான் கூறினார்கள்.
இதனால் ஆமைக் கறி பரிமாறப்பட்டது உண்மை தான். ஆனால் சீமானுக்கு ஆமைக் கறி கிடைக்கவில்லை. ஆமைக் கறி கொடுத்த கதைகளை சீமான் சொந்தமாக கூறி வருகிறார். சீமானுக்கு உடும்பு கறி பரிமாறப்பட்டது. நான் ஈழத்தில் மட்டும் 7 மாதங்கள் தங்கி இருந்தேன். நாம் சாப்பிடுவதை பின்னால் இருந்து குறிப்பெடுக்கும் கட்டமைப்பு விடுதலை புலிகளிடம் இல்லை.
தற்போது சீமான் சொல்லி வந்த கதைகளை அவரே நம்ப தொடங்கியது தான் பிரச்சனை.
நாம் தமிழர் இன்று இவ்வளவு பெரிய கட்டமைப்புடன் இருப்பதற்கு காரணம் சூசை என்னிடம் பேசிய ஆடியோதான். சீமானிடம் புகைப்படம் கொடுக்கக் கூடாது என்பதில் சேரலாதன் உறுதியாக இருந்தார். சீமானிடம் நான் ஆடியோ கொடுத்ததற்கு மூத்த ஊடகவியாளர் ஒருவர்தான் சாட்சி. சீமான் சொல்லக் கூடிய அனைத்து பொய்களையும் மறுக்க முடியும்.” என்று சந்தோஷ் கூறியுள்ளார்.