ஒடிசாவில் நடந்த குறைதீர் கூட்டத்தில், மாநகராட்சியின் கூடுதல் ஆணையர் தாக்கப்பட்ட சம்பவத்தில் பாஜக மாநகராட்சி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதலுக்கு பின்னணியில் பாஜக தலைவர் ஒருவர் இருந்தது தெரியவந்துள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நேற்று குறைதீர் கூட்டத்தின்போது, இளைஞர்கள் சிலருடன் அலுவலகத்துக்குள் புகுந்த பாஜக மாநகராட்சி உறுப்பினர் மாநகராட்சியின் கூடுதல் ஆணையர் ரத்னாகர் சாஹூ மீது சரமாரியான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அவரை அடித்து, உதைத்து தர, தரவென அலுவலகத்துக்கு வெளியே இழுத்துச் சென்றனர். இதை ஒருவர் வீடியோவாகப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஜூவன் ரெளத், ரஷ்மி மகாபத்ரா, தேபாஷிஸ் பிரதான் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக புவனேஸ்வர் மாவட்ட காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதில் ஜூவன் ரெளத் புவனேஸ்வர் மாநகராட்சியின் பாஜக உறுப்பினர் ஆவார்.
தன் மீதான தாக்குதல் தொடர்பாக சாஹூ அளித்துள்ள புகாரில், “அடையாளம் தெரியாத நபர்கள் ஆறிலிருந்து ஏழு பேர் அனுமதியின்றி அலுவலகத்துக்கு நுழைந்து, பாஜக தலைவர் ஜெகநாத் பிரதானுடனான தொலைபேசி அழைப்பு குறித்து ஆவேசமாக கேட்டனர். நான் அவரிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்றனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெகநாத் பிரதான் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் புவனேஷ்வர் மத்திய சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர் ஏன் சாஹூவை அடிக்க அடியாட்களை அனுப்பினார் என்பது குறித்து தெரியவில்லை.