அரசுப் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் கணித ஆசிரியர் சுந்தர வடிவேலு என்பவர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
மேலும் மாணவர்களை செல்போனில் புகைப்படம் எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வகுப்பு மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இது குறித்து பெற்றோரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளியில் புகார் தெரிவித்தனர். இதற்கிடையில் திருப்பூர் தெற்கு போலீசாரும் விசாரணையைத் தொடங்கினார்கள்.
அதிகாரிகள் தேடியபோது ஆசிரியரான சுந்தர வடிவேலு தனது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்றது உறுதி செய்யப்படவே, அவரை தேடிச் சென்ற அதிகாரிகள் அங்கு அவரை அதிரடியாக கைது செய்து திருப்பூர் அழைத்து வந்தனர். அவரிடம் தொடர்ந்து வீரபாண்டி காவல்நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுந்தர வடிவேலுவை போலீசார் கைது செய்துள்ளனர்.