காட்டுப்பள்ளி துறைமுகம் 
செய்திகள்

காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு வந்த ரூ. 9 கோடி மதிப்பிலான வெள்ளி கட்டிகள் திருட்டு!

Staff Writer

சென்னையை அடுத்த காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்திற்கு, இறக்குமதி செய்யப்பட்ட 8.96 கோடி ரூபாய் மதிப்பிலான 922 கிலோ வெள்ளி கட்டிகள் திருடு போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

காஞ்சிரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த தண்டலம், மண்ணுார் பகுதியில், 'பிரிங்க்ஸ் இண்டியா லிமிடெட்' நிறுவனம் செயல்படுகிறது. இது வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்கிறது.

இந்த நிறுவனத்திற்கு, லண்டனில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கி சார்பில், சீல் வைத்த இரு கன்டெய்னர்களில் 39,000 கிலோ எடையில், 1,305 வெள்ளி கட்டிகள், இந்தியாவிற்கு அனுப்பப்பட்டன. இது சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகத்திற்கு, கடந்த மாதம் 30ஆம் தேதி கப்பலில் வந்து சேர்ந்தது.

கடந்த 3ஆம் தேதி, துறைமுகத்தின் வழக்கமான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடைமுறை முடித்து, இரண்டு கன்டெய்னர்களும் ஸ்ரீபெரும்புதுார் கிடங்கிற்கு அனுப்பப்பட்டன. அங்குள்ள ஊழியர்கள், லாரிகளில் இருந்த கன்டெய்னர்களை ஆய்வு செய்தபோது, ஒரு கன்டெய்னரின், சீல் உடைக்கப்பட்டு, புதிதாக சீல் வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.

அந்த கன்டெய்னரை திறந்து பார்த்தபோது, 922 கிலோ எடையிலான 30 வெள்ளிக்கட்டிகள் குறைவாக இருப்பது தெரிந்தது. இவற்றின் மதிப்பு, 8.96 கோடி ரூபாய்.

இது தொடர்பாக காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.