இந்தியா- இங்கிலாந்து இடையில் நேற்று இரவு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை அரைஇறுதி ஆட்டம் மிகப்பரபரப்பாக நடந்தது. அக்சர் பட்டேல் பிடித்த அபாரமான இரண்டு கேட்சுகள், பும்ரா போட்ட துல்லியமான பந்துவீச்சு, ஹர்திக் பாண்டியா செய்த ரன் அவுட், முன்னதாக சஞ்சு சாம்சனின் அபார மட்டை வீச்சு ஆகியவற்றால் இந்தியா வெற்றியை ருசித்தது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2ஆவது அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது. நேற்று வீசப்பட்ட 40 ஓவர்களில் இரு அணிகளும் சேர்த்து 499 ரன்கள் அடித்துள்ளன.
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 257 ரன்கள் குவித்தது.
அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 89 ரன்களும் ஷிவம் துபே 43 ரன்களும், இஷான் கிஷான் 39 ரன்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து அணி சார்பில் வில் ஜேக்ஸ், ஆதில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
254 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி தடுமாற்றத்துடன் தொடங்கியது. பில் சால்ட் 5 ரன்னில் ஹர்திக் பாண்டியா பந்திலும், ஹாரி புரூக் 7 ரன்னில் ஜஸ்பிரீத் பும்ரா பந்திலும் ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் களமிறங்கிய 22 வயது இளம்வீரர் ஜேக்கப் பெத்தேல் இந்திய அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். அவர் அடித்த மரண அடியால் இந்திய ரசிகர்கள் பீதியில் அரண்டு போயினர். பெத்தேல் 100 ரன்களையும் குவித்தார். இதனால் கடைசி ஓவரில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 30 ரன்கள் தேவையாக இருந்தது. அக்சர் படேலுக்கு மட்டும் ஒரு ஓவர் பாக்கி இருந்தது. அந்த ஓவரை யாருக்குக் கொடுக்கப்போகிறார்களோ என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஷிவம் துபேவுக்கு மட்டும் கொடுத்துவிட வேண்டாம் என வர்ணனையாளர்கள் சொல்லிக் கொண்டு இருந்தனர். ஆனால் சூர்யகுமார் யாதவ் பந்தை ஷிவம் துபேவிடம் கொடுத்தார். ரசிகர்கள் முகத்தில் ஈ ஆடவில்லை. ஏனெனில் பெத்தேல் எவ்வளவு ரன் வேண்டுமானாலும் அடிக்கக்கூடிய கொலை வெறியில் இருந்தார்.
ஷிவம் துபே வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில் ஜேக்கப் பெத்தேல் 2 ரன்கள் சேர்க்க முயன்ற போது ரன் அவுட் ஆனார். ஹர்திக் பாண்டயா மிகச்சரியாகக் கணித்து பந்தை சஞ்சு சாம்சனை நோக்கி எறிந்தார். மிகக்குறைவான நேரத்தில் ஸ்டம்புகளை சாம்சன் தாக்கிவிட பெத்தேல் பாய்ந்து விழுந்தும் பலன் இல்லாமல் போனது. ஜேக்கப் பெத்தேல் 48 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் விளாசினார். அவர், ஆட்டமிழந்த பின்னரே இந்திய அணி பெருமூச்சுவிட்டது. இதையடுத்து ஜோப்ரா ஆர்ச்சர் களமிறங்கினார். அடுத்த இரு பந்துகளிலும் 2 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதன் பின்னர் ஜோப்ரா ஆர்ச்சர் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார். எனினும் அது வெற்றிக்கு போதுமானதாக இல்லை. 20 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ஜோப்ரா ஆர்ச்சர் 19, ஜேமி ஓவர்டன் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்கள் கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. வரும் 8ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.