விளையாட்டு

2ஆவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி.. ஆஸி.க்கு எதிரான தொடரை இழந்த இந்திய அணி!

Staff Writer

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வி அடைந்ததால், ஆஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி பெர்த் நகரில் நடைபெற்றதில் இந்திய அணி தோல்வியடைந்தது.

இதையடுத்து 2ஆவது ஒரு நாள் போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் சுப்மன் கில், ரோகித் சர்மா களம் இறங்கினர். 9 ரன்னில் கில் ஆட்டமிழக்க அடுத்து வந்த கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

அடுத்து இணைந்து ரோகித் – ஷ்ரேயாஸ் ஐயர் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருவரும் அரை சதம் கடந்தனர். 3 ஆவது விக்கெட்டிற்கு இருவரும் 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரோஹித் 73 ரன்களில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் 61 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் வந்த அக்சர் படேல் 44 ரன்களும், ராகுல் 11 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 12 ரன்களும் எடுத்தனர். ஹர்ஷித் ரானா அதிரடியாக 18 பந்துகளில் 24 ரன்கள் சேர்க்க 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 264 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி, ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். கேப்டன் மிட்செல் மார்ஷ் 11 ரன்கள் எடுத்து தொடக்கத்திலேயே வெளியேறினார். பின்னர் இணைந்த டிராவிஸ் ஹெட் – மேத்யூ ஷார்ட் பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தனர். ஹெட் 28 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த மேத்யூ ரென்ஷா 30 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேத்யூ ஷார் 74 ரன்கள் எடுத்து அணி வெற்றி இலக்கை நெருங்க உதவினார். மிட்செல் ஓவன் 36 ரன்களும், சேவியர் பார்ட்லெட் 3 ரன்களிலும், ஸ்டார்க் 4 ரன்களிலும் வெளியேறினர்.

வெற்றி இரு தரப்பினருக்கும் சாதகமாக இருந்த நிலையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கூப்பர் கோனோலி 53 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். 46.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 265 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது.

மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நிஞ்ஜா மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.