ஆட்டம் முடிய இன்னும் 11 நிமிடங்களே இருக்கின்றன. எகிப்து அணி இரண்டு கோல் போட்டு முன்னணியில் இருக்கிறது. எதிரணியான அர்ஜெண்டினா கடுமையாகப் போராடி எதுவும் செய்யமுடியவில்லை. அப்போதுதான் அந்த மேஜிக்.. மெஸ்ஸி மேஜிக்!
காலிறுதிப்போட்டிக்கு நுழைவதற்கான போட்டியில் எகிப்து- அர்ஜெண்டினா அணிகள் நேற்று மோதின. 2 கோல் அடித்து எகிப்து முன்னிலையில் இருந்த நிலையில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினாவின் வீரர் மெஸ்ஸி, ஒரு கிராஸ் ஷாட் அடிக்க, அதை அவ்வணி வீரர் கிரிஸ்டினா ரொமெரோ கோல் ஆக்கினார். இதை அடுத்து இரண்டாவது கோலை மெஸ்ஸியே அடித்தார். 2-2 என சம நிலை வந்தபோது கடைசி நேரத்தில் என்ஸோ பெர்னாண்டஸ் இன்னொரு கோல் அடித்து அர்ஜெண்டினாவின் வெற்றியை உறுதி செய்தார்.
தோல்வியில் இருந்து அர்ஜெண்டினா மீண்டு வந்ததை நம்ப முடியாமல் போட்டி முடிந்ததும் மெஸ்ஸி கண்ணீர் விட்டார்! அர்ஜெண்டினாவைத் தோற்கடித்து காலிறுதிக்கு நுழைந்துவிட்டோம் என எண்ணிய எகிப்து அணி தளர்ந்த்போனது!
அந்த அணியின் பயிற்சியாளர்,’ எங்களுக்கு எதிராக நடுவர்கள் தீர்ப்பு சொன்னார்கள். ஒரு கோலை ஏற்கவில்லை. நட்சத்திர வீரர் சாலாவுக்கு ஒரு பெனால்டி மறுக்கப்பட்டது… அவர்கள் மெஸ்ஸி இந்த போட்டியில் தொடரவேண்டும் என விரும்பினார்கள் போலிருக்கிறது” என்று சாடி உள்ளார்.
இன்னொரு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து- கொலம்பியா அணிகள் மோதின. கடைசிவரை இரு அணிகளும் கோல் போடவில்லை. எனவே பெனால்டி முறைப்படி போட்டி தீர்மானிக்கப்பட்டது. அதில் சுவிஸ் வெற்றி பெற்றது. 1954-க்குப் பின்னால் காலிறுதியில் அந்நாடு இப்போதுதான் நுழைகிறது.
காலிறுதியில் சுவிட்சர்லாந்து அர்ஜெண்டினாவை சந்திக்கிறது.