உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியின் காலிறுதி சுற்றுகள் தொடங்கியுள்ளன. காலிறுதிப் போட்டியில் முதலாவதாக முன்னாள் சாம்பியனான பிரான்ஸ் அணியும் , மொராக்கோ அணியும் மோதின.
இதில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி, மொராக்கோ அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
அமெரிக்காவின் பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் பாதியில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்பே எடுத்த பெனால்டி வாய்ப்பை மொராக்கோ அணியின் கோல்கீப்பர் யாசின் புனோ தடுத்ததால் இரு அணிகளும் கோல் இன்றி சமநிலையில் இருந்தன.
ஆனால், இரண்டாம் பாதியில் பிரான்ஸ் அணி தனது அதிரடி ஆட்டத்தில் இறங்கியது. போட்டியின் 60ஆவது நிமிடத்தில் எம்பாப்பே பிரான்ஸ் அணியின் முதல் கோலை அடித்தார்.
இதைத்தொடர்ந்து 66ஆவது நிமிடத்தில் ஒஸ்மான் டெம்பிலே கோல் அடித்து பிரான்ஸ் அணியை முன்னிலைக்கு கொண்டு் சென்றார். இதன் மூலம் பிரான்ஸ் அணி 2-0 என்ற புள்ளிக்கணக்கில் உலகக்கோப்பை அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
உலகக் கோப்பை வரலாற்றில் தனது 20-வது கோலை பதிவு செய்த எம்பாப்பே, மெஸ்சியின் சாதனையைச் சமன் செய்தார். மேலும், உலகக் கோப்பை நாக்அவுட் சுற்றுகளில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையையும் எம்பாப்பே படைத்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பைப் போட்டியில் 8 கோல்கள் அடித்து கோல்டன் பூட் தனி நபர் விருதுபெறும் வரிசையிலும் முன்னிலையில் உள்ளார்.