கேரி சோபர்ஸுக்கு வைக்கப்பட்ட சிலை, கென்னிங்க்ஸ்டன் ஓவல் மைதானம், பார்படோஸ் 
விளையாட்டு

முழு போதையில் அடித்த டெஸ்ட் செஞ்சுரி... கேரி சோபர்ஸ் என்னும் மகா ஆல்ரவுண்டர்!

முத்துமாறன்

அந்த பையனுக்கு ஆறு வயதாக இருந்தபோது தந்தை இறந்துவிட்டார். மிகுந்த வறுமை. அவனுக்கு ஆறுதலாக இருந்தது கிரிக்கெட் மட்டும்தான். தான் பிறந்து வளந்த பார்படோஸில் (மேற்கிந்திய தீவு) கிளப் கிரிக்கெட் ஆடிவந்தான். அது 1953. இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. பார்படோஸ் அணியுடன் ஒரு ஆட்டம் திட்டமிடப்பட்டது. பார்படோஸ் அணி, அப்போது 16 வயதாக இருந்த அந்த பையனை அணியில் சேர்த்துக்கொண்டது. ஆனால் ஒரு பிரச்னை அவனுக்கு. அது வரை அரைக்கால் சட்டையில்தான் ஆடிவந்தான். முழுக்கால் பேண்ட் அணிந்தால்தான் மூத்தோர் அணியில் ஆடமுடியும். அவசரமாக அவனுக்கு பேண்டும் மேல்சட்டையும் தயார் செய்யப்பட்டன.  அந்த ஆட்டத்தில் அவன் சுழற்பந்துதான் வீசினான். இரண்டு இன்னிங்கிஸிலும் சேர்த்து 7 விக்கெட் வீழ்த்தினான். இந்திய அணி வீரர், ‘இவன் பெரிய ஆளாக வருவான்,’ என கணித்தார்.

ஆம். கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய ஆட்டக்காரராக மாறினான் அச்சிறுவன். அவன் பெயர் கேரி சோபர்ஸ்! தன் 89 -வது வயதில் நேற்று இயற்கை எய்திய கேரி சோபர்ஸின் சாதனைகள் ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனுக்கு மனப்பாடம்!

1958-இல் சோபர்ஸ் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தன் முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார். முதல் சதமே உலக சாதனை. ஆமாம். 356 ரன்கள்! பல ஆண்டுகளுக்கு யாராலும் முறியடிக்க முடியாத சாதனையாக இருந்தது. அவர் ஓய்வு பெறுகையில் 93 டெஸ்டுகளில் 235 விக்கெட்டுகள், 26 சதங்கள் அடித்து, 109 கேட்சுகள் பிடித்து, ஒப்பிடமுடியாத மிகப்பெரிய ஆல்ரவுண்டர் என அறியப்பட்டார்!

வாழ்க்கை வாழ்வதற்கே என்பது சோபர்சின் கொள்கை. நைட் கிளப்புகள், சூதாட்டங்கள், மது, மாது என அவர் வாழ்க்கையை களியாட்டமாக வைத்திருந்தார். எதையும் மறைக்கவில்லை.

இந்தியாவுக்கு இரண்டு மேற்கிந்திய அணியின் இரு சுற்றுப்பயணங்களில் வந்துள்ளார். இரண்டாம் முறை வந்தபோது 17 வயதான நடிகை அஞ்சு மகேந்துருவைப் பார்த்து காதல்வயப்பட்டார். மும்பையில் திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால் அது திருமணத்தில் முடியவில்லை.

கேரி சோபர்ஸ்

கேரி சோபர்ஸ் தன் கடைசி சதத்தை இங்கிலாந்து அணிக்காக 1973-இல் அடித்தார். அது மிக சுவாரசியமான நிகழ்வு.

இங்கிலாந்துக்கு 3 டெஸ்ட் கொண்ட தொடருக்கு மேற்கிந்திய தீவுகள் அணி சென்றது. அதில் கேரி சோபர்ஸ் சேர்க்கப்படவில்லை. அவருக்கு முழங்காலில் பிரச்னை இருந்ததால் அவர் விலக்கப்பட்டார். ஆனால் அதே சமயம் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தார். முதல் போட்டி ஆடியதும் மேற்கிந்திய தீவு வீரர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டது. எனவே சோபர்ஸை அணியில் சேர்த்துக்கொண்டார்கள். இரண்டாவது போட்டி வென்றாகிவிட்டது. மூன்றாவது போட்டி லார்ஸ் மைதானத்தில். முதல் இன்னிங்க்ஸில் மே. இ. அணி ஆடியபோது 4 விக்கெட் இழப்புக்கு 335 ரன்களுடன் அன்றைய நாள் ஆட்டம் முடிந்தது. சோபர்ஸ் 31 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தார். அன்றைய ஆட்டம் முடிந்ததும் ஓட்டல் போய் பிரெஷ் ஆகி, கிளைவ் லாய்டும் சோபர்ஸும் ஒரு  விடுதிக்கு சாப்பிடப் போனார்கள்.

அன்று இரவு பழைய நண்பர் ஒருவரைப் பார்த்ததும் அவரை அழைத்துக்கொண்டு ஒரு நைட் கிளப் போனார். கொண்டாட்டம் தொடர்ந்தது. நைட் கிளப் போய் குடித்தனர். எங்கே குடித்தாலும் விடிவதற்கு முன் ஓட்டலுக்கு வந்து தூங்கிவிடுவார்.

ஆனால், விடிகாலைவரை சோபர்ஸுக்கு களைப்பே தெரியவில்லை. அந்த நண்பரையும் அழைத்துக்கொண்டு ஓட்டலுக்கு வந்து, அவருடன் சேர்ந்து சரக்குப் போட ஆரம்பித்தார். காலை 9 மணி ஆனதும் போனால் போகிறது என நிறுத்திவிட்டு, ஒரு குளியல் போட்டுவிட்டு பேட்டைத் தூக்கிக் கொண்டு மைதானத்துக்கு வந்தார். முதல் ஓவர்… பாப் வில்லிஸ் வேகமாக வீசினார். சோபர்ஸுக்கு எதிரே ஒருவர் ஓடிவருவது தெரிந்தது ஆனால் அவர் வீசும் பந்து கண்ணுக்குத் தெரியவில்லை. முதல் ஐந்து பந்துகள் தடவிக் கொண்டு நின்றார். ஆறாவது பந்து பேட்டில் பட்டது. ஒருவழியாக சமாளித்து ஆடினார். இடையில் திடீரென வயிறு வலிக்க ஆரம்பித்தது. அப்படியே ஒரு செஞ்சுரியும் அடித்துவிட்டார். மதியம் தேநீர் இடைவேளையின் போது 132 ரன்கள் அடித்திருந்தார். நடுவரிடம் போய், ‘எனக்கு முடியவில்லை.. நான் போகிறேன்’ என்றார். நடுவரோ, ‘ யோவ்.. கல்லு மாதிரி இருக்கீர்.. எந்த காயமும் ஏற்படலையே… ஏன் போறீர்?’ என்று கேட்டார். ‘ஐம்பது நிமிசமா வயித்துவலியில் ஆடுறேன். ஆளைவிடும்’ எனச் சொல்லிவிட்டு விடுவிடுவென பெவிலியனுக்குப் போய்விட்டார்.

போனவர் அங்கே ரெண்டு ரவுண்ட் பிராந்தி அடித்துப் படுத்துவிட்டு, அப்புறமாக மற்றவர்கள் அவுட் ஆன நிலையில் விளையாடப்புகுந்து, 150 ரன்கள் அடித்தார். எட்டு விக்கெட்டுக்கு 652 ரன்களும் அந்த இன்னிங்க்ஸை முடித்தது மேற்கிந்திய தீவுகள் அணி.

மறுநாள் செய்தித்தாள்களில் கேரி சோபர்ஸ், மிக முதிர்ச்சியான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்று எழுதினார்களாம்! உண்மையில் நடந்தது என்ன என்று அவர்களுக்கு எப்படித் தெரியும் என சோபர்ஸ் பேட்டி ஒன்றில் சொல்லி சிரித்திருக்கிறார்!

இதுதான் அவர் கடைசி செஞ்சுரி. அதன் பின் வந்த தொடர்களில் சரியாக ஆடமுடியவில்லை. ஓய்வு பெற்றுவிட்டார்.

கேரி சோபர்ஸ், டான் பிராட்மேன், சச்சின், காலிஸ், முத்தையா முரளிதரன் வரிசையில் என்றும் கொண்டாடப்படுவார்!