இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தனது நீண்ட நாள் காதலரும் இசையமைப்பாளருமான பலாஷ் முச்சலுடன் திருமணம் நிச்சயம் ஆனதை வீடியோ மூலம் அறிவித்துள்ளார்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இதில் 9 ஆட்டத்தில் ஆடிய மந்தனா ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 434 ரன்கள் குவித்தார்.
மராட்டியத்தை சேர்ந்த 29 வயதான மந்தனா தனது வாழ்க்கையில் இரண்டாவது இன்னிங்சை விரைவில் தொடங்குகிறார். அவரும் பிரபல இந்தி சினிமா இசையமைப்பாளரான பலாஷ் முச்சாலும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள். அவருடன் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் நடந்திருப்பதை உறுதிப்படுத்திய மந்தனா வருகிற 23ஆம் தேதி அவரை கரம் பிடிக்க உள்ளார்.
இந்த நிலையில், ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், திருமண நிச்சயமானதை உறுதிப்படுத்தும் விதமாக, இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷ்ரேயங்கா பாட்டீல் மற்றும் ராதா யாதவ் ஆகியோருடன் நடனமாடிக் கொண்டே, கையில் போட்டிருக்கும் நிச்சயதார்த்த மோதிரத்தை காட்டுகிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.