ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர்- கவாஸ்கர்' டிராபி தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 150 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 104 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் பும்ரா 5, ஹர்ஷித் 3, சிராஜ் 2 விக்கெட் கைப்பற்றினர். பின் 46 ரன் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது இந்திய அணி.
ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாற, ராகுல், ஜெய்ஸ்வால் அசத்தினர். இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி, 172 ரன் எடுத்து, 218 ரன் முன்னிலையுடன் வலுவான நிலையில் இருந்தது. ராகுல் (62), ஜெய்ஸ்வால் (90) அவுட்டாகாமல் இருந்தனர்.
நேற்று 3ஆவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது இந்திய அணி. ராகுல் 77 ரன்னில் ஸ்டார்க் பந்தில் கேட்சானார். அடுத்துவந்த படிகல் 25 ரன்னில் வெளியேறினார். பின்னர் ஜெய்ஸ்வாலுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால், 161 ரன்களில் அவுட்டானார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பந்த், துருவ் ஜுரல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால், எதிர்முனையில் நிதானமாக ஆடிய விராட் கோலி தனது 30ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். அத்துடன் இன்னிங்சை இந்தியா முடித்துக் கொள்வதாக இந்திய அணி அறிவித்தது. இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 487 ரன்கள் குவித்திருந்ததால் ஆஸ்திரேலிய அணிக்கு 534 ரன்கள் வெற்றி இலக்காக நிர்மாணிக்கப்பட்டது.
இமாலய இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் நாதன் மெக்ஸ்னி ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார். கம்மின்ஸ், லபுஸ்சேனும் வந்ததும் நடையைக் கட்டினர்.
மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலிய அணி 12 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்த நிலையில், இன்று 4ஆவது நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கிய நிலையில், ஸ்மித் 17 ரன்னில் வெளியேற மார்ஸ் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து, அலெக்ஸ் கேரி 36 ரன்னிலும் ஸ்ட்ராக் 12 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர். ஆஸ்திரேலியா அணி 238 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக அந்த அணியில் டிராவிஸ் ஹெட், 89 ரன்களை சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.