சதம் விளாசிய டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித்  
விளையாட்டு

3ஆவது டெஸ்ட்: தொடரும் 'தலை'வலி...டிராவிஸ் 'ஹெட்' சதம்! ஸ்மித்தும் பேக் டு ஃபார்ம்!

Staff Writer

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 405 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர்-கவாஸ்கர் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.

மூன்றாவது டெஸ்ட், பிரிஸ்பேனில் நடக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 28/0 ரன் எடுத்திருந்தது. கவாஜா (19), மெக்ஸ்வீனி (4) அவுட்டாகாமல் இருந்தனர்.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் பும்ரா வேகத்தில் கவாஜா (21), மெக்ஸ்வீனி (9) வெளியேறினர். நிதிஷ் குமார் ரெட்டி பந்தில் மார்னஸ் லபுசேன் (12) அவுட்டானார். பின் இணைந்த ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் ஜோடி நிதானமாக ஆடியது. இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்த இருவரும் சதம் கடந்தனர். நான்காவது விக்கெட்டுக்கு 241 ரன் சேர்த்த போது பும்ரா பந்தில் ஸ்மித் (101) அவுட்டானார். மிட்சல் மார்ஷ் (5) ஏமாற்றினார். மறுமுனையில் அசத்திய ஹெட் 152 ரன் விளாசினார். சிராஜ் 'வேகத்தில்' கேப்டன் பாட் கம்மின்ஸ் (20) அவுட்டானார்.

ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 405 ரன் எடுத்திருந்தது. அலெக்ஸ் கேரி (45), ஸ்டார்க் (7) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட் சாய்த்தார்.