19 வயதுக்குட்பட்டோர் ஆசியக் கோப்பையில் இந்தியா வெற்றி 
விளையாட்டு

கடைசி ஆளாக களமிறங்கி கோப்பையை ஜெயித்த உல்வா! காயத்துடன் கலக்கிய சேவாக் மகன்!

Staff Writer

கிரிக்கெட்டில் எப்போதாவாது அதிசயங்கள் நடக்கும். அப்படி ஒரு அதிசயத்தை இந்திய அணியின் இளையோர் அணி நடத்திக் காட்டி இருக்கிறது. 338 ரன் இலக்கைத் துரத்திய இந்திய அணி 8 விக்கெட்டுகளை 42 வது ஓவரில் இழந்தது. இனி வெற்றிக்கு வாய்ப்பே இல்லை என்றபோது கடைசி விக்கெட்டுக்கான ஜோடி 51 பந்துகளில் 88 ரன்களை அடித்து, அதுவும் கடைசி பந்தில் 4 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

ஓமனின் மஸ்கட்டில் உள்ள அல் அமெரத் கிரிக்கெட் மைதானத்தில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் அணியின் உஸ்மான் கான் 107 ரன்களும், அப்துல் காதிர் 80 ரன்களும், கேப்டன் ஃபர்ஹான் யூசப் 63 ரன்களையும் குவித்தனர். இந்திய அணியின் காவ்யா பரேஷ் படேல் 4 விக்கெட்டுகளையும், சிகுருபதி வெங்கடா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அடுத்ததாக, 338 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் லக்சயா ராய்ச்சந்தானி 80 ரன்களும், ஆர்யவீர் சேவாக் 58 ரன்களும் குவித்தனர். இந்திய முன்னாள் வீரர் சேவாக்கின் மகனான ஆர்யவீர், கையில் காயம் பட்டிருந்தபோதும் துணிச்சலுடன் களமிறங்கி ஆடியது அனைவரையும் கவர்ந்தது.

இருப்பினும், அடுத்தடுத்த விக்கெட்டுகளை பறிக்கொடுத்த இந்திய அணி, 42ஆவது ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்களுடன் திணறியது.

இதைதொடர்ந்து, அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் மனால் செளஹான் 32 பந்துகளில் 47 ரன்களும், மொஹித் உல்வா 26 பந்துகளில் 49 ரன்களும் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு கை கொடுத்தனர்.

இறுதியாக 50 ஓவர்களில், 9 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்களுடன் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது.

கடந்த 2021ஆம் ஆண்டிற்கு பிறகு, மீண்டும் 9ஆவது முறையாக நடப்பாண்டில் இந்தியா கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

கடைசி பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வெற்றி தேடிந்த மொஹித் உல்வா, கடைசி வீரராக ஆட வந்தவர். இருப்பினும் தன்னை ஓர் ஆல்ரவுண்டராக நம்பியவர். ‘ என் மீதும் கடவுள் மீதும் நம்பிக்கை இருந்தது, வாய்ப்புக் கிடைத்தது என்னை நிரூபித்தேன்.’ என்று சொன்னார்.

தொடரில் அதிக ரன்களைக் குவித்த ஆர்ய வீர் சேவாக், தொடர் நாயகனாகத் தேர்வானார். உல்வா ஆட்டநாயகன் விருது பெற்றார். இதே அணியில் ராகுல் திராவிடின் மகன் அன்வய் ராகுல் திராவிடும் விக்கெட் கீப்பராக ஆடினார் என்பது குறிப்பிடத் தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram