இந்திய மகளிர் அணி ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பையை முதல்முறையாக வென்றது பெருமளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
முதல் சுற்று ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளில் தோல்வி. சிறப்பாக ஆடிய தொடக்க ஆட்டக்காரர் பிரதீகா காயத்தால் விலக, அணிக்கு ஷெபாலி வர்மாவை அரையிறுதிக்கு எடுத்துவந்தனர். தட்டுத் தடுமாறிதான் அரை இறுதிக்குள் நுழைந்தனர். ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை உடைத்து வென்று, பலம் பொருந்திய தென்னாப்பிரிக்காவைப் பந்தாடி கோப்பையைத் தூக்கியதன் சந்தோஷம் அடங்க இன்னும் பல காலம் ஆகலாம். இந்திய மகளிர் கிரிக்கெட் இனிவரும் காலங்களில் மேலும் பல உயரங்களை எட்டும். ஜெமிமா, ஷெபாலி இருவரின் வெற்றிக்கதைகளும் கிரிக்கெட் சாகசக் கதைகளில் அழுத்தமாக இடம்பெற்றுவிட்டன.
சாதித்த இந்த அணியின் உறுப்பினர்களின் கருத்துகளின் தொகுப்பு.
கடவுள் அனுப்பினார்!
ஆரம்பத்திலேயே கடவுள் ஏதோ மிகச் சிறப்பாக செய்ய அனுப்பி இருக்கிறார் என்று சொல்லி இருந்தேன். உலகக் கோப்பை வென்றதன் மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல இயலாது. போட்டிகளின் இடையில் அணியில் வந்து சேர்ந்தது கடினமாக இருந்தாலும் என் சுய நம்பிக்கையை இழக்காமல் அமைதியாக இருந்தால் எதையும் சாதிக்கலாம் என நம்பினேன்.
சச்சின் சார் மைதானத்தில் இருந்து ஆட்டத்தைப் பார்த்தது எனக்கு கூடுதல் சக்தியை அளித்தது. என்னுடைய இயல்பான ஆட்டத்தை ஆடுமாறு சீனியர்கள் சொல்லி ஊக்கமூட்டினார்கள்!
-ஆட்ட நாயகி ஷெபாலி வர்மா( 87 ரன்கள், 2 விக்கெட்டுகள்)
இதைவிட சிறந்த தருணம் இல்லை
கனவு போல் இருக்கிறது. ஏராளமாகத் திரண்டுவந்து உற்சாகம் அளித்த ரசிகர்களுக்கு நன்றி. சூழலுக்கு ஏற்ப விளையாடவேண்டியதுதான் என் வேலை. ஒரு ஆல்ரவுண்டராக பங்களிக்க இதை விட சிறந்த தருணம் ஏதும் இல்லை. ஒரு அணியாக எங்களுக்கு மிகப்பெருமை அளித்த வெற்றி இது
-போட்டித் தொடரின் நாயகி தீப்தி சர்மா 215 ரன்கள், 22 விக்கெட்டுகள்
தூக்கமற்ற 45 நாட்கள்
கடந்த 45 நாட்களை எப்படி விளக்குவது என்றே தெரியவில்லை. ஆனால் இன்று உலக்கோப்பையை வென்றுவிட்டதால் கடந்த 45 நாட்கள் தூக்கமில்லாமல் கடந்த இரவுகளை ஏற்றுக்கொள்கிறேன். இந்த அணியின் வலிமை என்பது அனைவரும் ஒன்றிணைந்து ஒவ்வொருவருக்காகவும் ஆடியதே. உலகக்கோப்பை போன்ற ஆட்டத்தில் எல்லோருடைய ஆதரவும் வேண்டும். ஒருவர் வெற்றியில் மற்ற எல்லோருமே மகிழ்ந்தோம். ஓர் அணியாக மிகச் சிறப்பாக ஒருங்கிணைந்திருந்தோம்!
-ஸ்மிரிதி மந்தனா, இந்திய அணி வீரர்
தகுதியானவர்கள்
மிகமிக பெருமையாக உள்ளது.சந்தேகமே இல்லை. இது ஒரு நம்ப முடியாத வெற்றி. அணி உறுப்பினர்கள் மிகக் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். எல்லா பெருமைகளுக்கும் அவர்கள் தகுதியானவர்கள். அனைத்து இந்தியர்களையும் பெருமையாக உணரச் செய்துள்ளார்கள்.
-அமோல் மசூம்தார், இந்திய அணி பயிற்சியாளர்
சாதிப்போம் என நம்பிக்கை
முதல் பந்து வீசப்பட்டதிலிருந்தே எப்படியும் நாங்கள்தான் வெல்வோம் என்ற நம்பிக்கை. கடந்த மூன்று ஆட்டங்களாக நாங்கள் ஆடிய ஆட்டம் அப்படி. எங்கள் சுய நம்பிக்கை உள்ளிட்ட பல விஷயங்கள் மாறி இருந்தன. நீண்ட காலமாக நன்றாக ஆடுகிறோம். ஓர் அணியாக எங்களால் என்ன சாதிக்க முடியும் என எங்களுக்குத் தெரியும். ஸ்மிரிதி, ஷபாலி இருவரும் முதல் பத்து ஓவர்களை சிறப்பாக சமாளித்தார்கள்.
ஹர்மன்ப்ரீத் கவுர், இந்திய அணியின் கேப்டன்