ரவீந்திர ஜடேஜா 
விளையாட்டு

ஐபிஎல்2026: சிஎஸ்கேவில் இருந்து விடைபெற்றார் ஜடேஜா!

Staff Writer

சிஎஸ்கேவில் இருந்து நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விடைபெற்று, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்துள்ளார்.

சிஎஸ்கே நிர்வாகம் தனது சமூக வலைதள பக்கத்தில் விடியோ வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது.

19ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16ஆம் தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும், ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன்பாக பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் நடந்து வருகிறது.

இந்த நிலையில் சென்னை அணி 6 வீரர்களை விடுவிக்க திட்டமிட்டுள்ளது. முன்னதாக சிஎஸ்கே நிர்வாகம், சஞ்சு சாம்சனை வாங்க ராஜஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோரை தரும்படி ராஜஸ்தான் அணி கேட்டது.

இந்த பேச்சுவார்த்தை நீண்ட நாட்களாக நடந்து வந்தது. ஆனால் உறுதி செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக முன்னணி ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோரை கொடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்வந்துள்ளது. ஜடேஜா மற்றும் சாம் கரனை கொடுத்து சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் வாங்க சென்னை அணி சம்மதம் தெரிவித்துள்ளது. இரு அணிகளுக்கு இடையே டிரேடிங் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது.

கடைசியாக சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ஜடேஜா. இது குறித்து சிஎஸ்கே பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: மஞ்சள் நிறத்தில் தைரியத்தினை வரலாறு பேசும்போது, உனது பெயரை எதிரொலிக்கும். நன்றி, ரவீந்திர ஜடேஜா எனக் கூறியுள்ளது.