20 வயது மெஸ்ஸியும் 5 மாத யமாலும். நன்றி: மான்பார்ட்
விளையாட்டு

20 வயது மெஸ்ஸியும் 5 மாத யமாலும்... விளையாட்டின் வினோத முடிச்சு!

Staff Writer

கோடியில் ஒருமுறை இப்படி நடக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு ஒரு நிகழ்வு. அதைச் சொல்லும் படம் இந்த கால்பந்து உலகக்கோப்பை சமயத்தில் வைரலாகிக் கிடக்கிறது.

20 வயதான அர்ஜெண்டினா ஸ்டார் மெஸ்ஸியும், 5 மாதக் குழந்தையான லமைன் யமாலும்( இப்போதைய ஸ்பெயின் நட்சத்திர வீரர்) இடம்பெற்றிருக்கும் புகைப்படம் தான் அது.

2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பார்சிலோனா அணிக்காக மூன்று ஆண்டுகளாக ஆடிவந்திருந்த இளம் வீரர் மெஸ்ஸி, ஒரு புகைப்பட நிகழ்வுக்காக அழைக்கப்பட்டார். பார்சிலோனா அணிக்கு ஆடும் வீரர்களை குழந்தைகளுடன் இருக்க வைத்து காலண்டர் படங்கள் எடுப்பது வழக்கம். அதற்காக மெஸ்ஸி வந்தபோது ஒரு ஐந்து மாதக்குழந்தையைக் கொடுத்து அதைக் குளிப்பாட்டுவதாக ஒரு படத்தை மான்பார்ட் என்ற புகைப்படக்காரர் எடுத்தார்.

மெஸ்ஸியோ அந்த குழந்தையோ இவ்வளவு பெரிய சாதனையாளர்கள் ஆவார்கள் என யாரும் நினைத்திருக்க வாய்ப்பே இல்லை.

படம் எடுத்தவரே மறந்துபோய்விட்டார். 2024 ஈரோ சாம்பியன் ஷிப் கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணிக்கு 16 வயதே நிறைந்த யமால் ஆடினார். கோப்பையை ஸ்பெயின் வென்றது. அப்போது யமாலின் அப்பா அந்த படத்தை சமூக ஊடகத்தி வெளியிட்டார். அது வைரல் ஆனபோதுதான் அது தான் எடுத்த படம் என்றே மான்போர்டு அறிந்தாராம்! தான் எடுத்த படங்களிலேயே அதுதான் மிகப் பிரபலமான படம் என்று அவர் கூறுகிறார்.

மெஸ்ஸி- யமால்

தற்போது ஸ்பெயின் - அர்ஜெண்டினா இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. யமாலும் மெஸ்ஸியும் இதுவரை எதிர் எதிர் அணிகளில் ஆடியதே இல்லை.

ஆகவே முதல் முறை சந்திக்கப்போகும் இரு ஜீனியஸ் ஆட்டக்காரர்களை ரசிக்க கால்பந்து ரசிகர் உலகமே காத்திருக்கிறது!

இவர்களை 19 ஆண்டுகளுக்கு முன்பு இணைத்த விதியின் வினோத கரங்களை இந்த புகைப்படத்தில் கண்டு வியக்காமல் இருக்க முடிய வில்லை!