துளசிமதி முருகேசன் 
விளையாட்டு

பாரா ஆசியா : துளசிமதி முருகேசனின் 3 பதக்க அசத்தல்; ரூ.1.25 கோடி பரிசு!

Staff Writer

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் விஜய் தனது பாராட்டுகளையும் ரூ 2.80 கோடி உயரிய ஊக்கத்தொகையையும் அறிவித்துள்ளார்.

ஜப்பானின் ஐச்சி-நாகோயா நகரில் கடந்த 18ஆம் தேதி முதல் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா இதுவரை 28 தங்கம், 34 வெள்ளி, 47 வெண்கலம் என மொத்தம் 109 பதக்கங்களை வென்று நான்காவது இடத்தில் உள்ளது.

பேட்மிண்டன் விளையாட்டில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம், பெண்கள் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம், கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் என மொத்தம் மூன்று பதக்கங்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை துளசிமதி முருகேசன் வென்றார்.

இதைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.1.25 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

அதேபோல, பேட்மிண்டன் விளையாட்டில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற வீரர் நவீன் சிவகுமாருக்கு ரூ.75 இலட்சமும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நித்ய ஸ்ரீக்கு ரூ.50 இலட்சமும், டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜெஹான் டொரப் மதனுக்கு ரூ.30 இலட்சமும் உயரிய ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram