சஷாங் சிங்
சஷாங் சிங் 
விளையாட்டு

இவர் வேண்டாம் என உதறிய அணி... சம்பவம் செய்த வீரர்!

Staff Writer

நடப்பு ஐ.பி.எல். தொடர் பரபரப்புக்கும் அதிரடிக்கும் பஞ்சமில்லை என்று சொல்லலாம். குஜராத் அணிக்கு எதிராக பஞ்சாப் வீரர் சஷாங் சிங் செய்த சம்பவம்...”சும்மா தரமான சம்பவம்” என்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். இப்படி சம்பவம் செய்தவரையே, முன்பு சம்பவம் செய்தது பஞ்சாப் அணி நிர்வாகம்.

சஷாங் சிங் செய்த சம்பவம்

நேற்று இரவு நடைபெற்ற 17ஆவது ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 199 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி 8 ஓவருக்கு 90 ரன்கள் தேவைப்பட்டன. ‘போட்டி முடிந்து விட்டது, குஜராத் அணிதான் வெற்றி பெறும்’ என எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், அதன்பிறகு நடந்ததெல்லாம் மேஜிக்தான்.

6ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய சஷாங் சிங், பந்தை நாளா பக்கமும் பறக்க விட்டார். 6 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய சஷாங் சிங் 200 ஸ்டிரைக் ரேட்டில் டைட்டன்ஸ் அணி பவுலர்களை வெளுத்து வாங்கினார்.

கடைசி 2 ஓவருக்கு 25 ரன்கள் தேவை என்ற பரபரப்பான நிலையில், மோஹித் சர்மா வீசிய 19ஆவது ஓவரில் 2 சிக்சர்களுடன் 18 ரன்களை விளாசினார் சஷாங் சிங். இதன் மூலம் பஞ்சாப் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.

கடைசி 6 பந்துக்கு 7 ரன்கள் என போட்டிமாற கடைசிவரை நிலைத்துநின்ற ஆடிய சஷாங் சிங் பஞ்சாப் அணியை அசத்தலாக வெற்றிபெற வைத்தார். 29 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட சஷாங் சிங், தான் யார் என்பது நிரூபித்துள்ளார்.

பஞ்சாப் அணி செய்த சம்பவம்

ஐ.பி.எல். ஏலத்தின் போது ”தவறாக எடுத்துவிட்டோம் இவர் எங்களுக்கு வேண்டாம்” என பஞ்சாப் கிங்ஸ் அணி ஒதுக்கியது.

ஐ.பி.எல். ஏலத்தின் போது 19 வயதில் ஒரு வீரரும், 32 வயதில் மற்றொரு வீரரும் ஒரே பெயரிலிருந்தனர், நாங்கள் 19 வயது சஷாங் சிங்குக்கு பதிலாக 32 வயது வீரரை எடுத்துவிட்டோம் என பஞ்சாப் கிங்க்ஸ் இன்றைய சஷாங்கை ஏற்க மறுத்தது.

பின்னர், ' எங்களுக்கு இவரின் திறமை மீது நம்பிக்கை இருக்கிறது' என்று சமாளிப்புப் பதிவு போட்டது பஞ்சாப் கிங்ஸ் அணி. அதற்குப் பதிலளித்த 32 வயது சஷாங், “என் திறமை மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி” என தெரிவித்தார். அப்போது பஞ்சாப் கிங்ஸ் அணியால் வேண்டாம் என மறுக்கப்பட்டவர் தான், இன்று அந்த அணியை ஒரு மறக்க முடியாத வெற்றிக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

இந்தப்போட்டியில் 200 ரன்களை சேஸ் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 200 ரன்கள் மற்றும் அதற்கும் மேற்பட்ட ரன்களை அதிகமுறை சேஸ் செய்த முதல் அணியாக உள்ளது. இந்த த்ரில் வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.