ரொனால்டோ 
விளையாட்டு

வந்துட்டேன்னு சொல்லு…. கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வரலாற்று சாதனை!  

Staff Writer

தான் ஆடிய ஆறு உலகக் கோப்பைகளிலும் கோல் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

முன்னதாக காங்கோ டி ஆர் நாட்டுடன் 1-1 என்ற கணக்கில் போர்ச்சுகல் டிரா செய்தபோது ரொனால்டோ விமர்சனத்துக்குள்ளானார். இவரோட ஆட்டம் போயிடுச்சு..ஏன் இவரை அணியில் வெச்சிருக்கீங்க என்று பேச ஆரம்பித்தனர்.

இந்நிலையில் குரூப் கே பிரிவில் நடந்த உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் போர்ச்சுகல் அணி புத்துயிர் பெற்று 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ரோனால்டோ இரண்டு கோல்களை அடித்து கலக்கினார். ஆட்டம் முடிந்தபின் டெலிவிஷன் காமிராக்களை நோக்கி,’ ஐ ஆம் பேக்’ என்று உண்ர்ச்சியுடன் கத்தினார். ரோனால்டோவை விமர்சித்தவர்களுக்கு இது பதிலாக அமைந்தது.

இந்த 41 வயது வீரர், போர்ச்சுகலுக்காக உலகக்கோப்பையில் அதிக கோல் அடித்த சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார். அறுபது ஆண்டுகளுக்கு முன்பாக யூசுபியோ என்ற வீரர் அடித்த 9 கோல்கள்தான் முறியடிக்க முடியாத சாதனையாக இருந்தது.