தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் சேர்ந்து பயில 495 மாணவ-மாணவியர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று வழங்கினார்.
சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதியில் பள்ளி மாணவ-மாணவியரின் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆதவ் பேசியது:
”விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதன் மூலம் போதைப் பொருள் பயன்பாடற்ற தமிழகத்தை உருவாக்கிடவும், இளைஞர்களின் முன்னேற்றம், பெண்கள் பாதுகாப்பு உட்பட்ட பல்வேறு இலக்குகளை எளிதாக அடைய நடவடிக்கை மேற்கோள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் 27 விளையாட்டு விடுதிகள், 6 முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் 6,7,8,9 மற்றும் 11ஆம் வகுப்பு பள்ளி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று நடத்தப்பட்டு, விளையாட்டு விடுதி இடங்களுக்கான ஒதுக்கீடு ஆணைகள் தற்பொழுது வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக தடகளம், கூடைப்பந்து, வாள்வீச்சு, கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி, ஜுடோ, கபாடி நீச்சல், டேக்வோன்டோ, வாலிபால், பளுதூக்குதல், வுஷு ஆகிய விளையாட்டுகளுக்கு விளையாட்டு விடுதி சேர்க்கை நடைபெற்றது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டுவரும் 40 விளையாட்டு விடுதிகளில் கடந்தாண்டு வரை 2,517 மாணவ-மாணவியர்கள் தங்கி பயின்று வந்தனர். தற்பொழுது மாவட்ட, மாநில அளவில் தேர்ச்சிபெற்றவர்களில் முதல் 344 ஆண் மாணவர்கள், 151 பெண் மாணவர்கள் என மொத்தம் 495 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
உங்களைப் போன்றே நானும் தமிழ்வழிக் கல்வியில், அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரி விளையாட்டு விடுதி மாணவராக விடாமுயற்சியால் இந்த நிலையை அடைந்துள்ளேன். கிராமப்புறத்தில் பிறந்து வளர்ந்தவர்களாக இருந்தாலும், பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களாக இருந்தாலும் நம் முயற்சியின் மூலம் நம்மை சாதனையாளர்களாக மாற்றியமைத்து கொள்ளமுடியும்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் விளையாட்டு வீரராக பயிற்சியினை தொடங்கினால் உங்களது உயர்கல்வியின்போது தலைச்சிறந்த கல்லூரிகளும் உங்களுக்கு விளையாட்டுத் துறை ஒதுக்கீட்டின் கீழ் சேர்த்துக்கொள்ள அழைப்பு விடுக்கும் நிலை ஏற்படும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சி பெற்ற வீரர்கள் என்றாலே தனி மதிப்பு ஏற்பட்டுள்ளது. அப்துல் காலம் அவர்கள் தெரிவித்ததை போல ஒவ்வொரு மாணவனும் தனக்கான கனவினை அடைந்திட பெற்றோர்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மாணவர்களின் அத்தகைய கனவு ஒரு நாள் நிச்சயமாக அவர்களுக்கு வெற்றியை தேடித்தரும்.
தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கு இணங்க தமிழகத்திற்கென ஒரு சிறந்த 'விளையாட்டு கொள்கை' உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்பொழுது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டுத் விடுதியில் சேர்ந்துள்ள உங்கள் குழந்தைகள் ஒரு ராணுவ வீரனுக்கு நிகராக மாநிலத்தின் வெற்றிக்காகவும், நம் நாட்டின் வெற்றிக்காகவும் அவர்களை தயார்படுத்த வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை.”என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசினார்.