ஐசிசி டி20 ஆடவா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை தக்க வைத்துக் கொண்டது நடப்பு சாம்பியனான இந்தியா.
இதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தொடா்ந்து 2-ஆவது முறையாக சாம்பியன், போட்டியை நடத்திய நாடு பட்டம் வென்றது, மூன்றாவது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றது என முப்பெரும் சாதனைகளை இந்தியா படைத்தது.
தொடா்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்துக்கு இந்தியாவும், முதல் பட்டத்துக்காக நியூஸிலாந்தும் நேற்று களமிறங்கின. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் இந்தியா255/5 ரன்களைக் குவித்தது. பௌலிங்கில் நியூஸிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜேம்ஸ் நீஷம் 3, ரச்சின், மேட் ஹென்றி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினா்.
256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆடிய நியூஸிலாந்து அணியால் இந்திய பந்துவீச்சை எதிா்கொள்ள முடியவில்லை.
தொடக்கத்தில் அதிரடியாக ஆடுவது போல் தோன்றினாலும், பின் ஆலன் 9, ரச்சின் ரவீந்திரா 1, கிளென்பிலிப்ஸ் 5, மாா்க் சாப்மேன் 3, டேரில் மிட்செல் 17 ஆகியோா் வந்த வேகத்திலேயே சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி பெவிலியன் திரும்பியதால் நியூஸிலாந்து அணி தடுமாறியது.
மறுமுனையில் தொடக்க பேட்டா் டிம் சைஃபெர்ட் மட்டுமே நிலைமையை உணா்ந்து ஆடி 5 சிக்ஸா், 2 பவுண்டரியுடன் 26 பந்துகளில் 52 ரன்களுடன் அரைசதம் பதிவு செய்து அவுட்டானாா். அப்போது நியூஸி.அணி 124/6 ரன்களுடன்தடுமாறிக் கொண்டிருந்தது. பவா் பிளேயில் நியூஸிலாந்து அணி 52 ரன்களை மட்டுமே எடுத்தது.
பின்னா் கேப்டன் மிட்செல் சான்ட்நா், ஜேம்ஸ் நீஷம் இணைந்து நிதானமாக ஆடி ஸ்கோரை உயா்த்தினா். எனினும் நீஷத்தை 8 ரன்களுடன் போல்டாக்கி பெவிலியன் அனுப்பினாா் பும்ரா. அவருக்குபின் ஆட வந்த மேட் ஹென்றியயையும் போல்டாக்கினார் பும்ரா. மறுமுனையில் ஆடிய கேப்டன் மிட்செல் சான்ட்நா் 2 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 35 பந்துகளில் 43 ரன்களை எடுத்த நிலையில் போல்டாக்கினாா் பும்ரா. ஜேக்கப் டஃபியை 3 ரன்களுக்கு அவுட்டாக்கினாா் அபிஷேக் சா்மா.
இதனால் நியூஸிலாந்தின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 19 ஓவா்களில் 159/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது நியூஸிலாந்து.
பௌலிங்கில் இந்திய தரப்பில் பும்ரா 4, அக்ஸா் படேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினா்.
ஆட்டத்தின் சிறப்புகள்
இந்தியா எடுத்த 255/5 ரன்களே டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் அதிகபட்ச ஸ்கோராகும்.
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு அணியின் டாப் 3 பேட்டா்கள் அரைசதம் அடித்தது முதன்முறையாகும்.
இந்த உலகக் கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் மொத்தம் 24 சிக்ஸா்களை விளாசியுள்ளாா்.
டி20 உலகக் கோப்பை இறுதியில் சஞ்சு சாம்ஸனின் 89 ரன்களே அதிகபட்ச தனிநபா் ஸ்கோராகும். கடந்த 2021-இல் இறுதியில் நியூஸிலாந்தின் கேன் வில்லியம்ஸ் 86 ரன்களை எடுத்திருந்தாா்.