ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஸ்குவாஷ் பெண்கள் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்குவாஷ் வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா, ஷமீனா ரியாஸ் ஆகியோருக்கும் முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், ஊக்கத்தொகையையும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு:
" ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஸ்குவாஷ் பெண்கள் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்குவாஷ் வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் ஷமீனா ரியாஸ் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களது இச்சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவர்களது திறமை, தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவற்றால் பெற்றுள்ள இவ்வெற்றி, தமிழ்நாட்டின் விளையாட்டுத் திறனுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது.
அவர்களது வெற்றி சாதிக்கத் துடிக்கும் இளைஞர்கள் மற்றும் மகளிருக்குச் சிறந்த உத்வேகத்தை அளிக்கும். எதிர்காலத்திலும் அவர்கள் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் மேலும் உயர்த்திட எனது வாழ்த்துகள்!" என்று முதலமைச்சரின் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.