இந்திய மகளிர் அணி 
விளையாட்டு

மூன்று உலகக் கோப்பை... கபடியிலும் அசத்திய இந்திய மகளிர் அணி

Staff Writer

மகளிர் கபடி உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி மீண்டும் வெற்றி பெற்றதன் மூலம், நவம்பர் மாதத்தில் மட்டும் இந்திய மகளிர் அணியினர் மூன்று உலகக் கோப்பைகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.

வங்கதேச தலைநகர் டாக்காவில் 2025 மகளிர் கபடி உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்றன. 11 நாடுகளின் அணிகள் பங்கேற்றன.

இந்த உலகக்கோப்பைத் தொடரில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திவந்தது இந்திய மகளிர் அணி. லீக் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, ஈரானை 33–21 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இதற்கு இணையாகச் சீன தைபெய் (தைவான் நாட்டு விளையாட்டு அணிகளைக் குறிக்கும் பெயர்) அணியும் தோல்வியே இல்லாமல், அரையிறுதியில் வங்காள தேசத்தை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்தத் தொடர்தான், மகளிர் கபடி வரலாற்றில் நடந்த இரண்டாவது உலகக் கோப்பைத் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன், 2012-ஆம் ஆண்டு பாட்னாவில் நடந்த முதல் உலகக் கோப்பையில் 16 அணிகள் பங்கேற்றன. அந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி ஈரானை வீழ்த்தி முதல் கோப்பையைக் கைப்பற்றியது.

இந்த நிலையில், நேற்று பரபரப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தின் முடிவில் சீனா தைப்பே அணியை 35–28 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது இந்திய அணி.

இந்திய அணியின் பயிற்சியாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிதா செல்வராஜ் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

ஒரே மாதத்தில் 3 கோப்பைகள்

கடந்த நவம்பர் 2 ஆம் தேதி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை, நவம்பர் 23 ஆம் தேதி பார்வையற்ற மகளிருக்கான டி20 உலகக்கோப்பை மற்றும் நவம்பர் 24 ஆம் தேதி மகளிர் கபடி உலகக்கோப்பையை வென்று இந்திய மகளிர் அணி புதிய சரித்திரம் படைத்துள்ளது.