திரிஷா.ஜி credit: BCCI women X handle
விளையாட்டு

தன் தந்தையின் நீண்டகாலக் கனவை நனவாக்கிய திரிஷா!  

முத்துமாறன்

இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோர் மகளிர் அணி டி20 உலகக்கோப்பை 2025 ஐ வென்று சாதித்ததில் பெரிதும் கவனிக்கப்பட்ட பெயர் திரிஷா.

19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20போட்டிகளில் முதல் சதம் பதிவு செய்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று விக்கெட் வீழ்த்தினார். 44 ரன்கள் அடித்து கோப்பையைத் தட்டித் தூக்கினார். இந்த போட்டித்தொடரில் அவரது ரன் சராசரி 64.8. அதிகம் ரன்குவித்தவரும் தொடரின் நாயகியும் அவர்தான்.

திரிஷாவின் இந்த சாதனைக்குப் பின்னால் ஒரு தகப்பனின் அயராத உழைப்பு இருக்கிறது.

ராமி ரெட்டி சிறுவயதில்  ஹைதராபாத் நகரில் பதினாறு வயதுக்கு உட்பட்ட ஹாக்கி அணியில் விளையாடியவர். அதன் பின்னர் ஹைதராபாத்தில் இருந்து 300 கிமீ தொலைவில் இருந்த பத்ராசலத்துக்கு இடம் பெயர்ந்தார். விளையாட்டில் தன் கனவைத் தொடர இயலாத நிலையில் தன் மகள் மூலம் அதை நிறைவேற்றிக்கொள்ள நினைத்தார்.

அவளை கிரிக்கெட் வீராங்கனை ஆக்கவேண்டும் என்பது அவரது விருப்பம். அதனால் இரண்டு வயதில் பிளாஸ்டிக் பேட் வாங்கிக் கொடுத்தார். அப்போதிருந்தே கிரிக்கெட் பயிற்சி; அதற்கு ஏற்ற உணவுகள். 4 வயதாக இருக்கும்போதே ஜிம்முக்கு கூட்டிப்போய் பயிற்சிகள். பிறகு அவளுக்காகவே ஒரு கான்கிரீட் தளத்துடன் கூடிய கிரிக்கெட் நெட் அமைத்து அதில் தினமும் 1000 பந்துகளை வீசுவார்.

பள்ளிக்கு அனுப்பினால் பயிற்சி எடுக்க முடியாது என்பதால் ஆரம்ப காலத்தில் வீட்டில் இருந்துதான் அவளுக்கு படிப்பு.  பிறகு பள்ளியில் சேர்க்கபட்டாலும் மூன்று மணி நேரம் பள்ளியில். ஆறு மணி நேரம் கிரிக்கெட் பயிற்சி. வழக்கமான முறையில் பள்ளிக்குப் போயிருந்தால் அவள் இன்று இந்திய அணிக்காக ஆடியிருக்க முடியாது என்கிறார் ராமி ரெட்டி.

தந்தை ராமி ரெட்டியுடன்

11 வயதில் ஹைதராபாத்தில் இருக்கும் செயிண்ட் ஜான்ஸ் கிரிக்கெட் அகாதமியில் சேர்த்துவிட்டார். விவிஎஸ் லட்சுமணன், மிதாலிராஜ் போன்ற புகழ்பெற்ற வீரர்கள் உருவான இடம். மகளைப் பார்த்துக்கொள்ள வேலையை விட்டுவிட்டு இங்கே அவரும் வந்துவிட்டார்.

அங்கே திரிஷா மிகச் சிறப்பாக விளையாடினார்.  எட்டு வயதில் ஹைதராபாத் 16 வயதுக்குட்பட்டோர் அணியில் விளையாடத் தேர்வானார். 11 வயதில் 19 வயதுக்குட்பட்டோர் அணி, 12 வயதில் 23 வயதுக்குட்பட்டோர் அணி. அகாதமியில் அவரது பயிற்சியாளர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.

திரிஷா பேட்டிங்கில் மட்டுமல்ல; அருமையாக ஸ்பின் பந்துபோடுவதிலும் சிறந்து விளங்கினார். அவரது ஸ்டைல் பிடிபடுவதற்குள் சில ஓவர்கள் போட்டுவிடுவார்.

கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி

கோப்பையை இந்திய அணி வென்றபிறகு திரிஷாவுக்கு பல விருதுகள் வழங்கப்பட்டன. அவர் சொன்னார்: ‘ அப்பாவுக்கு என் வெற்றியை அர்ப்பணிக்கிறேன். அவர் இன்றி இந்த நிலைக்கு நான் வந்திருக்கவே முடியாது’

சல்யூட் தகப்பரே! இது போன்ற அப்பாக்களைப் பெற்ற திரிஷாக்கள் பாக்கியசாலிகள்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram