பெஞ்சல் புயல் காரணமாக இலங்கையில் பல்வேறு மாவட்டங்களிலும் சேர்த்து 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
சீரற்ற காலைநிலை காரணமாக ஒருவர் காணாமல்போய்விட்ட நிலையில் அவரைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இந்தப் பருவநிலை மாறுதலால் இருபது பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் மழையால் ஒரு இலட்சத்து 38 ஆயிரத்து 191 குடும்பங்களைச் சேர்ந்த 4, 63, 569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முழுமையாக 101 வீடுகளும் பகுதியளவில் 2,567 வீடுகளும் சேதமடைந்துள்ளன.
வீடுகள் சேதமடைந்தவர்களில் 31,080 பேர் நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் பேரிடர் மேலாண்மை மைய நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்ட புயல் வெள்ளத்தால் 4,800 ஏக்கர் பரப்பில் நெற்பயிர்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன; 3,900 ஏக்கர் பரப்பில் பகுதியளவில் சேதமாகியுள்ளன; இதற்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும் என்று விவசாயத் துறை இணை அமைச்சர் நாமல் கருணாரத்னா தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் 130-க்கும் மேற்பட்ட குளங்கள் உடைபட்டதாகவும் இதில் ஈழத்தமிழர் தாயகப் பகுதியில் உள்ள வவுனியா மாவட்டத்தில் மட்டும் 42 குளங்கள் சேதமடைந்துள்ளன என்றும் விவசாய மேம்பாட்டுத் துறை ஆணையாளர் உரோகண இராஜபக்சே தெரிவித்துள்ளார்.