கனடாவில் வாழ்ந்துவந்த தமிழீழக் கவிஞர் பேராசிரியர் சேரன் தன் 66 ஆவது வயதில் டொரண்டோ நகரில் நேற்று மரணமடைந்தார். சிறுநீரகத் தொற்று காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் மரணம் அடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 1960 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் அளவெட்டியில் பிறந்தவர் ருத்திரமூர்த்தி சேரன். இவர் ஈழத்தின் புகழ்பெற்ற கவிஞர் மஹாகவியின் மகனாவார்.
இரண்டாவது சூரிய உதயம், யமன், கானல் வரி, எலும்புக் கூடுகளின் ஊர்வலம், நீ இப்பொழுது இறங்கும் ஆறு, மீண்டும் கடலுக்கு மற்றும் காடாற்று போன்றவை இவரது முக்கியக் கவிதைத் தொகுப்புகளாகும்.
கனடாவின் வின்ட்சர் பல்கலைக்கழகத்தில் (University of Windsor) சமூகவியல் மற்றும் மானுடவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். ஈழத்தின் போர்ச்சூழல், இனக்கலவர நிகழ்வுகள் ஆகியவைதொடர்பான தமிழ் மக்களின் வலிகளை தம் நவீன கவிதைகள் மூலம் உலகுக்குக் கடத்தியவர் சேரன்.
அவரது மறைவு குறித்து திமுகவின் கனிமொழி கருணாநிதி விடுத்த இரங்கல் செய்தியில், “ஈழத்துக் கவிஞர் சேரன் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. ஈழத் தமிழர்களின் போர்க்காலத் துயரங்களையும், புலம்பெயர்வின் வலிகளையும் தனது கவிதைகளின் வழியே உலகறியச் செய்தவர். கவிஞராகவும், ஆய்வாளராகவும், ஊடகவியலாளராகவும் தமிழ் இலக்கியத்திற்கும் சமூகத்திற்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்கியவர். நெடுங்காலமாக என்னுடன் நட்பும் அன்பும் பாராட்டி வந்தவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். என கூறியுள்ளார்.
சேரனின் மரணத்துக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.