வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கையின் ஈழப்பகுதியான கிழக்கு, வடக்கு பகுதிகளில் நேற்று இரவு முதல் நல்ல மழை பெய்துவருகிறது. குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலையில் இன்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக குச்சவெளியில் 16.65 செ.மீ. அளவுக்கு மழை பொழிந்துள்ளது.
திருகோணமலையில் 15.19 செ.மீ., கடற்படைத் தளத்தில் 12.75 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
மூதூர் பிரதேசத்தில் கனமழையால் வெள்ளம் உருவாகி, தாழ்வான நிலங்களை மூழ்கடித்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு நகரில் அதிகபட்சமாக 6.5 செ.மீ மழையும்,
முல்லைத்தீவில் 7.05 செ.மீ., விடுதலைப்புலிகளின் விமான ஓடுபாதை அமைக்கப்பட்டிருந்த இரணைமடு பகுதியில் 4.73 செ.மீ., அலம்பிலில் 3.53 செ.மீ., கிளிநொச்சியில் 3.52 செ.மீ. அளவுக்கு மழை பதிவானது.
ஆனால், மன்னாரில் 2.78 செ.மீ. மழை பெய்தது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் திருநெல்வேலியில் 1.65 செ.மீ. அளவுக்கே மழை பெய்திருந்தது.
கிளிநொச்சி பரந்தன்- முல்லைத்தீவு (ஏ 35) சாலையில் சுண்டிக்குளம் சந்திக்கு அருகில் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு வாகனத்தின் மீது மரம் சாய்ந்துவிழுந்ததில், அந்த வாகனம் சேதமடைந்தது.
முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் முடிவடைந்து அரசுப் படைகளிடம் மக்கள் சரணடைவதற்காகச் சென்ற வட்டுவாகல் பாலம், இன்றைய மழை வெள்ளத்தால் முழுவதுமாக மூழ்கடிக்கப்பட்டது. வண்டிகளில் சென்றவர்கள் முதலில் கவனமாக மெதுவாக ஊர்ந்தபடி வாகனங்களைச் செலுத்தினர்.
ஒரு கட்டத்துக்கு மேல் வெள்ளம் அதிகமானதால், முல்லைத்தீவு, முள்ளியவளைக்குச் செல்லும் மக்களை கேப்பாப்பிலவு வழியாக மாற்றுப்பாதையில் செல்லுமாறு நீர்வளத் துறையினரும் காவல்துறையினரும் அறிவுறுத்தினர்.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா இரவிகரன் வட்டுவாகல் பாலத்துக்குச் சென்று நிலைமையைப் பார்வையிட்டார்.