சென்னைக் கொலையில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரும்- இலங்கை பாதாள உலக குற்றக் கும்பலுடன் நெருக்கமாக இருந்த பின்னணியில் அந்நாட்டு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் அனுர குமர திசநாயக்கவின் தலைமையிலான நிர்வாகம், நீண்ட காலம் முறைகேடுகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் மீது விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளது. குறிப்பாக, அமைச்சர்களாக இருந்து அத்துமீறல்களில் ஈடுபட்டவர்களையும் புதிய அரசு சாதாரணமான குடிமக்களைப் போலவே கையாண்டுவருகிறது.
முன்னாள் அரசுத்தலைவர்கள் மகிந்த இராஜபக்சே, இரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் மீதும் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பிணை வழங்கப்பட்டது.
அதைப் போல, முன்னாள் அமைச்சர் டக்ளசுக்கும் பாதாள உலகத் தொடர்பால் சிக்கல் வந்துள்ளது. அண்மையில் இறந்துபோன பாதாள உலகக் குற்றவாளியிடம் டக்ள்சின் கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டது.
அதை அவருக்கு கடந்த 2001இல் இலங்கை இராணுவம் வழங்கியிருந்தது. அதன்பிறகும் 19 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர் அவரிடம் மூன்று நாள்களாக தீவிர விசாரணை நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாக, அவரைச் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜனவரி 9ஆம் தேதிவரை அவர் தடுப்புக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.