ம.க.சிவாஜிலிங்கம் 
இலங்கை

இலங்கைத் தமிழர்க் கட்சித் தலைவர் சிவாஜிலிங்கம் மறைவு!

Staff Writer

இலங்கையின் தமிழீழ அரசியல் கட்சித் தலைவரும் பிரபாகரனின் சொந்த ஊரைச் சேர்ந்தவருமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ம.க.சிவாஜிலிங்கம் காலமானார். அவருக்கு வயது 69. 

எண்பதுகளில் எழுந்த தமிழீழத்து விடுதலைப் போராட்டத்தில் தமிழ் ஈழ விடுதலைக் கழகம் எனும் டெலோ அமைப்பில் இணைந்து செயல்பட்ட சிவாஜிலிங்கம், பின்னர் அந்த இயக்கம் அரசியல் கட்சியாக மாறியபோது தேர்தல் அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். 

தமிழீழ விடுதலைப்புலிகளின் முனைப்பால், நான்கு தமிழீழக் கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது அதில் முக்கியப் பங்காற்றினார். 

கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைப் போரின்போது அங்கு தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களையும் துயரங்களையும் தமிழ்நாட்டுக்கும் இந்திய அரசுக்கும் தெரிவிக்கும் வகையில், ஒரு தூதுவரைப் போலச் செயல்பட்டார். 

இந்தியாவில் வலதுசாரிகள் முதல் இடதுசாரிகள்வரை அனைத்துவிதமான கட்சிகள், அமைப்புகளுடனும் உறவைப் பேணி தங்களுடைய பிரச்னைகளை எடுத்துச்சொல்வதில் சளைக்காமல் ஈடுபட்டார். 

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், அதையடுத்து இலங்கையின் வடக்கு மாகாண சபையின் உறுப்பினராகவும் போட்டியிட்டு வென்று செயல்பட்டார். கடைசிக் கட்டத்தில், தான் பிறந்த வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளராகவும் வென்று பணியாற்றிக்கொண்டிருந்தார்.  

மற்ற தமிழீழத்து அரசியல்வாதிகளைப் போல அல்லாமல், மிகவும் எளிமையான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்த சிவாஜிலிங்கம், கடைசிவரை சொந்த வீடில்லாமல் வாடகை வீட்டில் வசித்துவந்தார். 

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நீரிழிவு நோயால் அவதிப்பட்டுவந்த அவர், சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பிலுள்ள மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை செய்துகொண்டார்.  

அதன்பிறகான தொடர்  சிக்கல்களால் நலிவடைந்த அவர், கடந்த சனிக்கிழமையன்று இரவில் வல்வெட்டித்துறையில் காலமானார். 

அன்னாருக்கு உலகம் முழுவதுமுள்ள ஈழத்தமிழ் அமைப்புகள், ஈழ ஆதரவு அமைப்பினர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.