பாரதி இராஜநாயகம், இலங்கை பத்திரிகையாளர் 
செய்திகள்

இலங்கை மூத்த பத்திரிகையாளர் பாரதி இராஜநாயகம் காலமானார்!

Staff Writer

இலங்கை மூத்த தமிழ் பத்திரிகை ஆசிரியர்களில் ஒருவரான பாரதி இராஜநாயகம் யாழ்ப்பாணத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 61.

கடந்த மாதம் 21ஆம் தேதி அன்று அலுவலகத்தில் பணியில் இருந்த போது திடீரென மயக்கமுற்ற அவர், யாழ்ப்பாணம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சில நாள்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு சாதாரண வார்டுக்கு அவர் மாற்றப்பட்டார். பின்னர் வீடு திரும்பிய நிலையில் அவருக்கான சிகிச்சை தொடர்ந்தது.

இந்த நிலையில் இன்று மாலை அவர் இயற்கை எய்தினார்.

மறைந்த பாரதி இலங்கையின் முரசொலி ஏட்டில் பத்திரிகையாளராகப் பணியை தொடங்கியவர். தினக்குரல் நாளேட்டின் வார இதழ் ஆசிரியராக கொழும்பில் நீண்ட காலம் பணியாற்றி வந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணம் திரும்பிய அவர் பல்வேறு ஊடகங்களுக்கு கட்டுரைகளை எழுதி வந்தார். அண்மையாக வீரகேசரி நாளேட்டில் வடக்கு மாகாண பதிப்புக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்று பணியாற்றி வந்தார்.

நம் அந்திமழை இதழுக்கும் இணையதளத்துக்கும் பல முறைகள் அவர் தன் கருத்துக்களை வழங்கி இருக்கிறார்.

அன்னாருக்கு நம் ஆழ்ந்த அஞ்சலி!