பவன் கல்யாண் 
செய்திகள்

கருணாநிதி ஆதரித்ததை ஸ்டாலின் எதிர்க்கிறார்... வாங்க பேசலாம் - பவன் கல்யாண் அழைப்பு!

Staff Writer

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஆதரித்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியுள்ளார்.

சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டக் கருத்தரங்கில் ஆந்திர துணை முதல்வரும், ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

”ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி தவறான தகவல் பரப்பப்படுகிறது. தேர்தல் நேரத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற்றதாக சொல்வார்கள். அதே சமயம் தாங்கள் தோல்வியடைந்தால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்திருப்பதாக குற்றம்சாட்டுவர். ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்திலும் இரட்டை வேடம் போடுகின்றனர். அந்த காலத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வந்தால் அது சூப்பர். இப்போது கொண்டு வந்தால் மோசம் என்கின்றனர்.

இதைப் பார்க்கும்போது "மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்" என்ற பழமொழி தான் ஞாபகம் வருகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் இந்தியாவுக்கு புதிதல்ல. தமிழகத்திற்கும் புதிது அல்ல.

இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் புதிதல்ல. 1952 - 1967 வரை சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது.

ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும் என முன்மொழிந்தது அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி இதைக் கொண்டுவரவேண்டும் என விரும்பினார். இப்போது அவர் கட்சிக்காரர்களே அதை எதிர்க்கிறார்கள். இப்போது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்ப்பவர்கள் கலைஞர் கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி புத்தகத்தை படிக்க வேண்டும்.

அதில் ஒரே நேரத்தில் சட்டமன்ற - நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார். இது கலைஞரின் கனவு, அவரின் சிந்தனை. அதுதான் தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனால் அப்பாவின் கனவு நிறைவேறக்கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கிறார்.

கடந்த 20 வருடங்களாக தேர்தல் தொடர்ந்து வருவதால் அரசும், நிர்வாகமும் சோர்வடைகிறது. அதற்கான செலவு, ஆள் பலம், உழைப்பு எனப் பெரிதாக செலவாகிறது. அதனால் நாட்டின் வளர்ச்சி வெகுவாக பாதிக்கிறது.

அடுத்தடுத்து தேர்தல் வருவதால் அரசியல் கட்சிகளும் தொடர்ந்து பிரசாரம் செய்துகொண்டிருக்க வேண்டிய சூழல், தேர்தலுக்காக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் வென்றால், சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்ற சுழற்சி இருக்கிறது.

அதனால் தேர்தல் ஆணையமும் பெரிதாக சோர்வடைகிறது. எனவே, குறைவான பலத்தில் பெரிதான வேலையை செய்யும் திட்டம்தான் ஒரே நாடு ஒரே தேர்தல். அதைத்தான் ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைத்திருக்கிறது.

இந்த முறை பின்பற்றப்பட்டால் இந்தியாவின் ஜிடிபி-யும் அதிகரிக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தலில் ஒரே அரசையே மக்கள் தேர்வு செய்யும் கட்டாயம் ஏற்படும் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஒடிசா அரசியலை எடுத்துக்கொள்ளுங்கள்.

2019இல் மாநிலத்தில் நவீன் பட்நாயக் கட்சியும், மத்தியில் பா.ஜ.க-வும் வெற்றிப்பெற்றது. 2024இல் இரண்டிலும் பா.ஜ.க வென்றிருக்கிறது. எனவே மக்களுக்கு தெரியும். நாட்டுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

ஒரே நாடு ஒரேத் தேர்தல் விவகாரத்தில் உங்கள் முடிவை மறு ஆய்வு செய்ய வேண்டும். எதாவது பிரச்னை இருந்தால் அமர்ந்து பேசி விவாதிக்கலாம். ஒரே நாடு ஒரேத் தேர்தல் இந்தியாவுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கும் அவசியமானது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.