உச்சநீதிமன்றம் 
செய்திகள்

வக்பு வாரிய திருத்தச் சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

Staff Writer

வக்பு வாரிய திருத்தச் சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதோடு, மத்திய அரசு 7 நாள்களில் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றிய வக்பு வாரிய திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் காரசார வாதங்கள் நடைபெற்றது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வக்பு வாரிய சட்டத்திற்கு இடைக்கால உத்தரவை பிறப்பி்க்க உத்தேசித்து உள்ளோம். இவை தொடர்பாக வாதங்களை இன்று பி்ற்பகல் 2 மணிக்கு முன் வைக்கும் வகையில் விசாரணை தள்ளி வைக்கப்படுகிறது என்று தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று பிற்பகல் 2 மணியளவில் மீண்டும் விசாரணை தொடங்கியது. அப்போது, உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கக் கூடாது என்று சொலிசிடர் ஜெனரல் வாதத்தை முன்வைத்தார். மேலும், மத்திய அரசு தரப்பில் ஆவணங்களை சமர்பிக்க 7 நாட்கள் அவகாசம் கோரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி, வழக்கு முடியும் வரை புதிய சட்டத்தின்படி வாரியத்தின் உறுப்பினர்கள் நியமனம் எதுவும் நடைபெறக்கூடாது, 1995 சட்டத்தின் கீழ் பதியப்பட்ட சொத்துகளை தொந்தரவு செய்யக்கூடாது என்றும் தெரிவித்தார்.

இதனை ஏற்ற உறுதி சொலிசிடர் ஜெனரல், வழக்கு முடியும் வரை புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள், மாநில வாரியங்களில் நியமிக்கப்பட்டால் அது செல்லாததாக கருதப்படும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து உத்தரவு பிறப்பித்த தலைமை நீதிபதி, "மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க 7 நாள்கள் அவகாசம் கோரப்பட்டுள்ளது. அடுத்த விசாரணை தேதி வரை புதிய சட்டத்தின் கீழ் வாரிய உறுப்பினர் நியமனம் நடைபெறாது என்று சொலிசிடர் ஜெனரல் உறுதியளித்துள்ளார். 7 நாட்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். அடுத்த விசாரணையில் 5 மனுதாரர்கள் மட்டுமே இருக்க வேண்டும். நீங்களே 5 பேரைத் தேர்ந்தெடுக்கவும். மற்றவை தள்ளுபடி செய்யப்பட்டவையாக கருதப்படும்" என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணை மே 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.