நடிகர் சூர்யா 
செய்திகள்

அரசியலில் களமிறங்கும் சூர்யா? – ரசிகர் மன்றம் மறுப்பு!

Staff Writer

நடிகர் சூர்யா குறித்து பரவும் அவதூறுகளுக்கு அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தேர்தல் வரவிருக்கும் நிலையில் சூர்யாவும் களமிறங்குவதாகவும் இதற்காக பிரசாரத்தில் ஈடுபடுவாரெனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், இது குறித்து அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: “ஊடக நண்பகர்களுக்கும், சமூக வலைத்தள நண்பர்கள், சகோதர, சகோதரிகளுக்கும் அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பில் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த சில நாள்களாக அண்ணன் சூர்யா அவர்கள் பற்றி சில பொய்யான தகவல்கள் இணைய ஊடகங்களில் பரவி வருகின்றன. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அண்ணன் சூர்யா அவர்கள் களமிறங்கப் போகிறார் என்று சமூக வலைத்தளங்களை மையமாக வைத்து இந்தப் பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது.

இந்தச் செய்தி உண்மைக்கு மாறான போலியான தகவல் என்பது மட்டுமல்ல, அண்ணன் சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது.

சூர்யா நற்பணி இயக்கத்தின் அறிக்கை

கலை உலகப் பயணமும், அகரமும் இப்போதைய அவர் வாழ்வுக்கு போதுமான நிறைவைத் தந்துள்ளது.

சமீபத்தில் நடந்த அகரம் நிகழ்வு தமிழ்நாடு மட்டுமின்றி உலகு தழுவிய அளவில் கவனம் ஈர்க்கப்பட காரணமானவர்களாகிய உங்களுக்கு எங்கள் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.

அண்ணன் சூர்யாவை நேசிக்கும் கோடிக்கணக்கான தம்பி, தங்கைகள், நண்பர்களின் வாழ்த்துக்களோடு சினிமாவில் மட்டுமே அண்ணனின் கவனம் இருக்கும்.

எங்கள் அண்ணன் சூர்யா அவர்கள் பற்றி வெளியான போலியான இந்தச் செய்தியைத் திட்டவட்டமாக மறுக்கிறோம்.” எனக் கூறப்பட்டுள்ளது.