அமைச்சர் தங்கம் தென்னரசு 
செய்திகள்

தமிழ்நாட்டின் வளர்ச்சி 9.69 சதவீதமாக அதிகரிப்பு! – அமைச்சர் தங்கம் தென்னரசு

Staff Writer

பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக நிதி காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற ஸ்டாா்ட் அப் திட்டத்தில் தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்காக நடைபெற்ற ‘புத்தொழில் களம்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“தமிழக அரசின் நிகழாண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக இருந்தது. மேலும், பொருளாதார நிபுணர்களான சி.ரங்கராஜன், கே.ஆா்.சண்முகம் ஆகியோர் தங்களது அறிக்கையில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 9.3 சதவீதமாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தனர்.

தற்போது மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி நிலைத்த விகிதங்களில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.69 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில், தமிழகத்தில் விவசாயம், உற்பத்தி, சேவை துறைகள் முக்கியப் பங்கு வகித்துள்ளன.

இது கடந்த 10 ஆண்டுகளில் எட்ட முடியாத வளர்ச்சி ஆகும். தமிழக முதல்வர் கடந்த 4 ஆண்டுகளில் எடுத்த பல்வேறு முயற்சிகளின் பயனாக, இந்த வளர்ச்சி கிடைத்துள்ளது. அதன்படி ரூ.15. 75 லட்சம் கோடியாக இருந்த தமிழகத்தின் பொருளாதாரம் நிகழாண்டு ரூ.17.23 லட்சம் கோடியாக உயர இருக்கிறது.

எனவே, வரும் 2030 ஆம் ஆண்டில் ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை பெறக்கூடிய அளவிற்கு இந்த வளர்ச்சி விகிதம் அமையும்.” என்றார்.