இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் விஜய்க்கு ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதில், "புதிய கீதை" வழியில் தீயசக்திகளை எதிர்த்து நல்லது நடக்க துணை நிற்க வாழ்த்துகிறேன்.” என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ள வாழ்த்து கூட்டணிக்கு தூதுவிடுவது போல் இருப்பதாக தெரிகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், விஜய் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழிசை சவுந்தரராஜன் -தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர்
"நாளைய தீர்ப்பு" -இல் ஆரம்பித்து "அழகிய தமிழ் மகனாக" வலம் வந்து "திருப்பாச்சி"-இல் தங்கை பாசத்தையும் "சிவகாசி" இல் தாயின் அன்பையும் பிரதிபலித்து "துப்பாக்கி" ஏந்தி தீவிரவாதிகளை அழித்து தேச பக்தியை வெளிப்படுத்தி "வாரிசு" அரசியலை எதிர்த்ததால் தனக்கு வந்த இன்னல்களிலிருந்து "சுறா"வாக நீந்தி "கில்லி" யாக வெற்றி கண்ட "தமிழன்", "ஜன நாயகன்" தம்பி விஜய்க்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். "புதிய கீதை" வழியில் தீயசக்திகளை எதிர்த்து நல்லது நடக்க துணை நிற்க வாழ்த்துகிறேன்.
சீமான் - நாம் தமிழர் கட்சி தலைவர்
தனித்துவமிக்க நடிப்பு, ஈர்க்கும்படியான நடனம், ரசிக்கத்தக்க நகைச்சுவை, கதாபாத்திரங்களை உள்வாங்கிக் கொண்டு, உயிரோட்டமாகப் பிரதிபலிக்கும் திறன் என எல்லா ஆற்றல்களையும் வளர்த்துக்கொண்டு மக்களை மகிழ்வித்து, தமிழ்த்திரைத்துறையில் உச்சம் தொட்ட ஆகச்சிறந்த திரைக்கலைஞன்! தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி விஜய்க்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
அன்புமணி ராமதாஸ் - பாமக தலைவர்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தம்பி விஜய் 51-ம் பிறந்தநாளை இன்று கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட, நோயில்லா வாழ்வு பெற்று பொதுவாழ்க்கையில் புதிய சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஜி.கே.வாசன் - தமிழ் மாநில காங்கிரஸ்
இன்று பிறந்த நாள் காணும் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அவர்கள் தமிழக மக்கள் நலன் காக்கும் பணியாற்ற நல்ல உடல் நலத்துடன், நீடுடி வாழ தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டிடிவி தினகரன் - அமமுக
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புச் சகோதரர் திரு.விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். விஜய் நீண்ட ஆயுளோடும் பூரண உடல்நலத்துடனும், மக்கள் பணியை தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.