சர்ச்சைக்குரிய கார்ட்டூனின் ஒரு பகுதி 
செய்திகள்

விகடன் முடக்கம் பற்றி தமிழக கார்ட்டூனிஸ்ட்டுகள் கருத்து!

Staff Writer

விகடன் இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரத்துக்காக அந்தப் பக்கத்தை மத்திய மின்னணு, தகவல்தொடர்பு  அமைச்சகம் முடக்கிவைத்துள்ளது. 

விகடனின் ஆஸ்தான கார்ட்டூனிஸ்ட் ஆசிப்கான் வரைந்துள்ள இந்த கார்ட்டூன் காரணமாக, அதன் இணையதளத்தையே முடக்கியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து அரசியல் கார்ட்டூனிஸ்ட்டுகளின் கருத்தை அறிய அந்திமழை சார்பில் பேசினோம். அவர்கள் கூறியதிலிருந்து...!

கார்ட்டூனிஸ்ட் பாலா

கார்ட்டூனிஸ்ட் பாலா : 

”அமெரிக்காவிலிருந்து விலங்கிட்டு அனுப்பப்பட்ட இந்தியர்கள் செய்தியைப் பார்க்கும் கார்ட்டூனிஸ்ட்டுகள் இப்படித்தான் அதை கார்ட்டூனாக்குவார்கள்..

இந்த கார்ட்டூன் கருத்து சுதந்திரத்தின் வெளிப்பாடு..

விகடன் இணையத்தை முடக்கும் அளவிற்கு இந்த கார்ட்டூனில் என்ன தவறு இருக்கிறது?

ஒருவேளை கார்ட்டூன் மீது விமர்சனம் இருந்தால் அதற்கு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கலாம்..

ஆனால் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அதிகாரத்தைப் பயன்படுத்தி முடக்குவது பாசிசச் செயல்பாடு.

கார்ட்டூன் என்பது காலத்தின் கண்ணாடி..

கார்ட்டூன்களுடன் மோதிய அதிகார மையங்கள் அசிங்கப்பட்டதுதான் கடந்த கால வரலாறு.

பா.ஜ.க. அரசும் அசிங்கப்படும்.

விகடனுடன் துணை நிற்கிறோம்.. உடனடியாக விகடன் இணையதள முடக்கத்தை மத்திய அரசு நீக்க வேண்டும்.”

கார்ட்டூனிஸ்ட் ஆசிப்கான்

கார்ட்டூனிஸ்ட் ஆசிப்கான் (விகடன்) : 

”Cartoon is an art of controversy தானே. அரசுகளையும் அதிகாரத்தில் இருப்பவர்களையும் கேள்வி கேட்பது, விமர்சிப்பதுதான் பத்திரிகைகளின் கடமை. இதில் முக்கியமானது தலையங்கமும் கார்ட்டூனும். கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் ஆக்கபூர்வமாக, ஜனநாயகபூர்வமாக பதில் சொல்லவேண்டும்; செயல்படவேண்டும்.

மாறாக, கார்ட்டூனை முடக்குவது அல்லது இணையதளத்தை முடக்குவது என்பது எதேச்சதிக்காரப் போக்கு. அமெரிக்காவிலிருந்து இந்தியர்களை கைகளிலும் கால்களிலும் சங்கிலியிட்டு அனுப்பிய விவகாரத்தில் அமெரிக்காவுக்குமுன் நம் நாடு ஏதும் செய்யமுடியாத கையறு நிலையில் (hands are tied) இருப்பதைத்தான் அந்த கார்ட்டூன் சொல்கிறது. பிரச்சினையைச் சரியாகக் கையாளாமல் கார்ட்டூன் மீது கோபத்தைக் காட்டுவது, திசைதிருப்பல் மட்டுமே. இது ஜனநாயகத்தின் அடிப்படையான கருத்து சுதந்திரத்தை நசுக்குவதாகும்.”

கார்ட்டூனிஸ்ட் வீரா

கார்ட்டூனிஸ்ட் வீரா (தீக்கதிர்) :

" பத்திரிகை உட்பட்ட ஊடக சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், அடிப்படை ஜனநாயக உரிமை ஒட்டுமொத்தமாக அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது, இந்த முடக்கம். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உடனடியாக இதை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும்.

அனைத்து ஜனநாயக சக்திகளும் இதை வலியுறுத்தவேண்டும். பத்திரிகையாளர்கள், ஊடகத்தினர் அனைவரும் இந்த நடவடிக்கைக்காக எதிர்த்து குரல்கொடுக்க வேண்டும்.

கார்ட்டூனில் யாரையும் தனிப்பட்ட முறையில் அவமதிக்கக்கூடாது, இழிவுபடுத்தக்கூடாது. மற்றபடி அது அரசியல்ரீதியாக கேலியும் கிண்டலுமாகத்தான் இருக்கும். அப்படி இருந்தால்தான் அது கார்ட்டூன். காட்சியும் இருக்கவேண்டும், கருத்தும் இருக்கவேண்டும், கிண்டலும் இருக்கவேண்டும். இப்படி இருப்பதுதான் கார்ட்டூன் என்பதற்கு அர்த்தம். அந்தக் குறிப்பிட்ட கார்ட்டூனில் எந்தத் தவறும் இல்லை.

கைவிலங்கிட்டு திருப்பியனுப்பிய டிரம்பின் நடவடிக்கை சர்வதேச அளவிலும் கண்டிக்கப்பட வேண்டும். அதைப்போலத்தான் தேசிய அளவில் இந்த ஊடக முடக்கத்தையும் கண்டிக்கவேண்டும்.”

கார்ட்டூனிஸ்ட் கமல்

கார்ட்டூனிஸ்ட் கமல் :

“ விகடன் இணையதளத்தை முடக்கும் அளவிற்கு இது மோசமான தனிநபர் கார்ட்டூன் கிடையாது. உண்மையை அப்படியே காட்டியிருக்கிறார்கள். இப்படியான தடை என்பது தொடர்ந்தால், நிச்சயம் பத்திரிகை சுதந்திரத்தை நேரடியாகவே மிரட்டுவது போலத்தான். இந்திய மக்களைக் கைவிலங்கிட்டு அவமரியாதை செய்த அமெரிக்க அரசாங்கத்தைக் கண்டிக்காமல்- வாய் திறக்காமல் மோடி அமைதியாக இருந்ததை இதைவிடத் தெளிவாகக் காட்டமுடியாது. இதற்காக இணையதளத்தை முடக்கிய நடவடிக்கையைைத் திரும்பப்பெற வேண்டும்.”