தமிழக மீனவர்கள் கைது (மாதிரிப்படம்) 
தமிழ் நாடு

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது… தொடரும் துயரம்!

Staff Writer

அனுமதிச் சீட்டு பெற்று கடலுக்குச் சென்ற ராமேசுவரத்தை சேர்ந்த 10 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

மேலும், அவர்களின் விசைப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

நெடுந்தீவு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட மீனவர்களை காரைநகர் கடற்படை முகாமில் வைத்து இலங்கை படையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிக்கும் குற்றத்துக்காக தொடர்ந்து இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.

மேலும், அவர்கள் செல்லும் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து நாட்டுமையாக்கி வருகின்றனர். கைது செய்யப்படும் மீனவர்களை விடுவிப்பதற்கு பல லட்சம் ரூபாய் அபராதமாக இலங்கை நீதிமன்றம் விதித்து வருகின்றது.

தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின கடிதம் எழுதி வருகிறார்.