தமிழ் நாடு

100 பேர்... துப்புரவுப் பணியிலிருந்து தொழில் முனைவோர்!

Staff Writer

துப்புரவுப் பணியாளர்கள், மறைந்த பணியாளர்களின் வாரிசுகளை தொழில்முனைவோராக ஆக்கும் திட்டத்தின்படி 100 பேருக்கு இன்று நவீன இயந்திரங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

”சென்னை குடிநீர் வாரியம், நகராட்சி மற்றும்   பேரூராட்சிகளில் தூய்மைப் பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களான 39 நபர்கள், 48 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் 126 வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஆதிதிராவிடர் / பழங்குடியினருக்கு முன்னுரிமை கொடுத்து, மொத்தம் 213 நபர்களுக்கு நவீன இயந்திரங்கள் வழங்கி இவர்களை தொழில் முனைவோர்களாக மேம்படுத்த 27.12.2023 அன்று பணி ஆணைகள் வழங்கப்பட்டது.

இவ்வகையான நவீன கழிவுநீரகற்று இயந்திரங்கள்  பெறுவதற்காக அண்ணல் அம்பேத்கர் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் சிறப்பு நிகழ்வாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 50 விழுக்காடு மானியம் வழங்கி, மொத்தம் 213 நபர்களுக்கு கடன் உதவி மற்றும் மானியம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 8.3.2024 அன்று வழங்கப்பட்டது.

சென்னை குடிநீர் வாரியத்தில் இத்திட்டத்தின் வாயிலாக பணியாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்ச வருமானமாக தலா 50 ஆயிரம் ரூபாய் என 7 ஆண்டுகளுக்கு உறுதிசெய்யப்படும். இப்பணிகளுக்காக 500 கோடியே 24 இலட்சம் ரூபாய் நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் இந்த குடும்பத்தினருக்கு நிரந்தர வருமானம் உறுதி செய்யப்பட்டு அவர்களுடைய வாழ்வாதாரத்தையும், சமுதாய கௌரவத்தையும் மேம்படுத்த இந்த சிறப்பு திட்டம் வழிவகுத்துள்ளது.

இப்பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்களுக்கு புதிய தொழில்நுட்ப இயந்திரங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் முறையான பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை குடிநீர் வாரியத்தில் பணிபுரியும் அனைத்து தூய்மைப் பணியாளர்களையும் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம், திறன் மேம்பாட்டு பயிற்சி, தொழிற்கல்வி மற்றும் பயிற்சி கடன் திட்டம் போன்றவை தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பதினருக்கு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

அதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் இன்று முதற்கட்டமாக 100 தூய்மைப் பணியாளர்களுக்கு நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்களுக்கான சாவிகளை வழங்கி, அவ்வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.