தமிழ் நாடு

1000 பேர் நிரந்தரம் : மா.சுப்பிரமணி அறிவிப்பு, ஒப்பந்த செவிலியர் போராட்டம் நிறுத்திவைப்பு

Staff Writer

ஒரு வாரமாகப் போராட்டம் நடத்திவந்த ஒப்பந்த செவிலியர்களின் வேலைநிறுத்தம் இன்று தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. பதின்மூன்றாயிரம் ஒப்பந்த செவிலியர்களின் வேலையை நிரந்தரம் செய்யக்கோரி தொடர் போராட்டம் நடந்துவந்த நிலையில், கடந்த இரு நாள்களாக அவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கைதுசெய்தனர். 

போராட்டம் தீவிரமடைந்த நிலையில் கூட்டணிக் கட்சிகளும் சீமான் முதலிய எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். 

பிரச்னை முற்றியதை அடுத்து மீண்டும் மீண்டும் அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

அதன்முடிவாக, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெயரில் அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில், முதல் கட்டமாக ஆயிரம் ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும் மற்றவர்கள் படிப்படியாக நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும் இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை வரவேற்று தொடர் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.